1921 செப்டம்பர் 11, இரவு சுமார் 1.30 மணி,
வெளியேறத் துடிக்கும் உயிரோ பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது.
சில நிமிடங்களில் அந்த 39 வருஷக் கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.
அந்த மகாகவியின் உயிர் பிரிந்தது. ஒரு மகாகவியின் வரலாறு இவ்வாறு முடிந்தது.
ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ? ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ?
குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தன.
இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று, சுமந்தவர்களையும் சேர்த்து.
தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள். ஆனால் துயரத்தின் சுமையை?
எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்...
பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க, ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.
ஓராயிரம் கவிதைகளை
உச்சரித்த உதடுகளை
ஞான வெளிச்சம் வீசிய
அந்த தீட்சண்ய விழிகளை
ரத்தம் வற்றினாலும்
கற்பனை வற்றாத
அந்த இதயத்தை...
தேடித்தேடித் தின்றன
தீயின் நாவுகள்.
மகா கவிஞனே!
எட்டையபுரத்து கொட்டு முரசே!
உன்னைப் பற்றி உள்ளூரே புரிந்து கொள்ளாத போது,
இவ்வுலகதிற்குப் புரிவது ஏது?
உன் எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது?
நன்றி Kiruba Haran