Thursday 4 April 2019

NAAN YAAR?

Mahindran who was introduced to me by Bala Chandran has been an ardent devotee of Agathiyar frequenting AVM, now ATM and helping in the daily puja for Agathiyar with Malarvathy, has also given himself to serving the poor through the many programs he has helped organize for PTS.

He has put down his thoughts in writing and the outcome is a wonderful narration of his journey before and after coming to the path of the Siddhas.

I shall let him take the floor now.
நான் யார்?
நான் மகேந்திரன்.
வயது 29.
இன்று 1/4/2019.
நான் யார்? ஏன் மனிதனாக படைக்கப்பட்டேன்? எனது படைப்பின் நோக்கம் தான் என்ன? எனது வருகையில் யாருக்கு நன்மை தீமை? என்று எனக்குள் பல கேள்விகள் கேட்ட வண்ணமகவே இருக்கின்றன. இத்தகைய கேள்விகளுக்கு நான் யாரிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்று நான் மீண்டும் மீண்டும் என்னை நானே கேட்டுக்கொண்டேன். பின்னர் நான் அறிந்துக்கொண்டது ஒன்று மட்டுமே. எனக்குள் எழும்பிய கேள்விகள் யாரை பற்றியது, ஏதைப் பற்றியது. அக்கேள்விகள் என்னை பற்றியது ஆகவே நான்தான் அதற்க்கு விடைத் தேட வேண்டும் என்று அறிந்துக்கொண்டேன். 
5 வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் பாலசந்திரன் மூலமாக அகத்தியர் ஆசீ நூல் (ஒலைசுவடி) பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க நான் மிக ஆவலோடு சென்றிருந்தேன். எனது ஆவல் அகத்தியர் என்ன கூறப்போகிறார் என்பது மட்டுமே தவிர எனது வாழ்வில் நான் கொண்ட கஷ்டங்களை குறைக்கச் சொல்லி அல்ல. நான் சுவடி காணும்வரை எனது வாழ்க்கையும் மனதும் ஒரு சில சஞ்சலத்தோடு தான் இருந்து வந்தது. இறைவனின் அருளால் அவைகளை நான் கடந்து வந்தேன். ஆனாலும் இவை வருவதர்க்கான காரணம் என்ன என்று அகத்தியர் தான் சுவடி முலம் அவை எனது முன்ஜேன்ம கர்மவினை என்று உணர்த்தினார். உணர்த்துவதோடு மட்டும் அல்லாது சில பரிகாரங்கள் முலம் குறைக்கும் வழிகளையும் கூறினார். அவர் கூறியவாறு நானும் பரிகாரங்களை செய்ய துடங்கினேன். சில பரிகாரம் மலேசியாவிலும் சிலது இந்தியாவிலும் செய்தேன்.
ஆரம்ப காலத்தில் நான் எப்படி இந்தியாவிற்கு சென்று பரிகாரம் செய்வது என்று எண்னிக்கோட்டே இங்கு உள்ள பரிகாரங்கள் செய்தேன். அகத்தியர் ஆசியால் நண்பர்களோடு அடுத்த வருடமே இந்தியா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. பாலச்சந்திரன் முலம் எங்களுக்கு அய்யா தவயோகி தங்கராசு மற்றும் மாதாஜி சரோஜினி அம்மையார் அறிமுகமானார்கள். 14/11/2014 நாங்கள் முதல் முறையாக இந்தியாவிற்கு பயணம் தொடங்கினோம். அன்று தவயோகி தான் எனது குரு என்று அறியாமலே நான் அவர்களின் அகத்தியர் ஞானப் பீடம் கல்லார் ஆசிரமத்தில் தங்கினேன். அகத்தியர் அப்பா ஆசியோடு எங்களது இரவை அங்கு கழித்தோம்.
மறுநாள் 15/11/2014 அன்று நாங்கள் ஆசிரமத்தில் நடைப்பெற்ற பூஜையில் கலந்துக்கொண்டு அகத்தியர் ஆசி பெற்றோம். நான் யார் ? எனது பிறவி பயன் என்ன ? என்ற தேடல் அன்றே என்னில் ஊற்றெடுத்தது. அதன் காரணமாக நான் கல்லாரில் தவயோகி அப்பாவிடம் அகத்தியர் ஜீவநாடி பார்க்க ஆவலாக இருப்பதை சொல்லி நான் தயார் செய்து வைத்திருந்த கேள்விகளை அவரிடம் கொடுத்தேன். அப்பொழுது அகத்தியர் அப்பா என்னை மகனே கேள் என்று அழைத்த நொடி நான் உருகிப்போனேன். எனது கேள்விகளுக்கு அகத்தியர் அப்பா பதில் அளிக்க எனது பிறவி பலன் அவரது புகழைப் பறப்புவதே என்று நான் உணர்ந்தேன். அதோடு மட்டும் அல்லாது அகத்தியர் அப்பா என்னை அகத்தியர் வனம் மலேசியா (தற்போது அகத்தியர் தபோவனம் மலேசியா - ATM) விற்கு சென்று சண்முகம் ஆவடையப்பா அவர்களின் ஆலோசனையும் அகத்தியர் வழிப்பாட்டையும் கற்றுக்கொள்ளுமாரு வழியுருத்தினார். அன்று முதல் நான் ATM க்கு செல்லுவதை வழக்கப்படித்திக் கொண்டேன். 
அதன் பின்னர் நாங்கள் எல்லா பரிகாரத்தையையும் செய்துவிட்டு மலேசியா திரும்பினோம்.

நான் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் வண்ணம், பரிகாரங்கள் செய்ய செய்ய என்னிடம் சில மாற்றங்களை நான் உணர்ந்தேன். அதன் முதல் படியாக நானும் என் நண்பர்களும் “தொண்டு செய்வோம்” என்றப் பெயரில் சிரிய குழு அமைத்து ஏழை எளியோறுக்கு உதவிக் கரம் நீண்ட முயன்றோம். அகத்தியர் அப்பாவின் ஆசியோடு எங்களது சேவை மிக செவ்வனே நடந்தேறியது. இதுநாள் வரை ஒரு சிறிய துன்பம் கூட என்னை வலு இலக்கச் செய்யும். என்று நாங்கள் வீதியில் வசித்து தங்களின் வாழ்க்கையைக் கடத்துபவர்களை கண்டேனோ அன்று முதல் நான் இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டே இருக்கிறேன். அன்று அகத்தியர் அப்பா எனக்குள் உணர்த்தியது ஒன்று மட்டுமே, என் வாழ்வில் நான் கண்டது எதுவும் கஷ்டங்கள் அல்ல, அவை அனைத்தும் எனது எண்ணங்களை வலிமை படுத்தவே.
அந்த படிப்பினைகள் எனக்குள் புதிய உத்வேகத்தை தந்தது, நானும் என் வாழ்வில் எது நடந்தாலும் குறைக் கூறாமல் ஒரு பாடமாகவே பார்க்கத்துடங்கினேன்.

இதுதான் சரியையோ ?

இவ்வாறு வாழ்க்கை பயணம் முழுதும் அகத்தியர் அப்பா ஆசியோடு சிறப்பாக இருந்து வந்தன. இரண்டாம் படியாக அகத்தியர் அப்பா எனக்கு கற்று தந்த பாடம் ஜீவகாருண்ணியம். நான் உணவு என்று உண்ணும் காலம் தொடங்கி அன்று வரை எனது பெற்றோர் புலால் உண்ணுவது தான் முறையான பழக்கம் என்று சொல்லி வந்தனர். அன்று ஒரு தினம் எனக்குள் ஒரு உணர்வு, நம்மைப் போல் தானே பிற ஜீவராசிகளும் நாம் ஏன் நம் நாவின் ருசிக்காக அவைகளை துன்புறுத்தவேண்டும். அப்போது நான் என்னை அறியாது கதறி அழுதேன். என்னுள் அந்த உணர்வு ஓர் உருத்தலாகவே இருக்க இனியும் நான் புலால் உண்ணப்போவது இல்லை என்று முடிவு செய்தேன். இதோடு ஒருவருட காலம் ஆகிய நிலையில் நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். எங்காவது ஏதேனும் உயிரினங்கள் மாண்டு கிடந்தால் அகத்தீசா அதனது ஆன்மா உங்களையே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதோடு அறியாது கண்ணிரூம் சிந்திவிடுவேன்.

இதுதான் கிரியையோ?

இவை என்னுல் இருந்து உணர்த்துவதை நான் எப்படி உணர்ந்தேன்? இதுதான் அகத்தியர் அப்பா எனக்கு வழியுணர்த்துகிறார் என்று நான் எப்படி கண்டுகொண்டேன்? இங்குதான் நான் முதலில் கூறியதைப் போல் அகத்தியர் தபோவனம் மலேசியாவிற்கு செல்ல தொடங்கிய நான், குறுகிய காலத்திலே சண்முகம் அண்ணனோடு நல்ல நட்பு கிடைக்க அதுவே வளர்ந்து அப்பா மகன் போல் மாறியது. இங்குதான் அகத்தியர் எனக்கான குருக்குலம் அமைத்து சண்முகம் அண்ணனை குருவாகவும் பாவித்து சித்தர் வழி போதனை கற்றுத்தருகிறார். முதல் முறையாக நான் ATM வரும் பொது அங்கு நான் கண்டது அகத்தியர் அப்பாவின் உருவ சிலை அல்ல, நான் கண்டது சிவலிங்கம். சிறிது நேரம் கழித்தே அவர் அகத்தியர் என்று உணரத்தொடங்கினேன். ஆரம்ப நிலையில் சண்முகம் அண்ணன் தம்பதியர்களாகவே ஓமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூசைகளை செய்து வர நானும் மற்றவர்களும் பார்வையாளர்களாக இருந்து ஆசி பெற்றோம். பின்னர் ஒரு நாள் எனக்குள் ஒரு ஆசை பிறக்க அதையே அண்ணனும் அறிந்து என்னை அகத்தியர் அப்பாவிற்கு அலங்காரம் செய்ய வாய்ப்பளித்தார். எனக்குள் அப்படி ஒரு ஆனந்தம், அதே நிலையில் நான் வெளிப்படையாக சொல்லாமல் எப்படி அவருக்கு எனது ஆசை தெரியவந்தது என்ற குழப்பம். அப்போது அகத்தியர் அப்பாவின் திருவிளையாட்டை நான் உணர்ந்தேன். 
எனக்குள் அலங்காரம் செய்யும் திரன் இருப்பதை வெளிக்கொணர்ந்ததும் அகத்தியர் அப்பாவே. இன்று வரை அவர் என் மூலமாக பல வடிவங்களிள் (சிவன்/ அம்பாள்/ பெருமாள்/முருகன்/ வினாயகர்/ கால பைரவர்/ நரசிம்மர்/ நந்தீஸ்வரர்/ ஆனுமான்) அலங்காரம் செய்துவருகிறார்.

பின்னர் ஒரு நாள் சண்முகம் அண்ணனின் உறவினர் கௌரி ஆறுமுகம் அக்காவின் ஓலைச்சுவடியில் அகத்தியர் அப்பா அவரைப் பற்றி ஒரு பாடல் குறுந்தட்டு வெளியேற்றம் செய்ய சொல்லியதன் காரணமாக அண்ணனை காண வந்திருந்தார். அப்போது என்னையும் அண்ணன் அழைக்க நான் மெய் சிலுர்த்தேன். முதல் பாடலாக “பாட வந்தேனே” என்ற தாலாட்டு பாட்டுக்கு நாங்கள் பாடல் வரிகள் எழுதினோம். அகத்தியரை முதல் முறையாக நாங்கள் குழந்தை வடிவமாக பாவித்து அப்பாடலை அமைத்தோம். எனக்கே அகத்தியர் அப்பா மகனாக/மகளாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு வடித்த வரிகள் என்னை அழச் செய்தது. பாடல் வெளியிட்டு விழாவில், நாங்கள் இசையோடு கேட்கும் நிலையில் அத்தனை பாடல் வரிகளும் என் மனதிற்கு அமைதியை உணர்த்துவதுப் போலவே இருந்தது.

இதுவே யோகமோ?

இதுநாள் வரை அகத்தியர் அப்பா எனக்கு உணர்வுப்பூர்வமாகவே எல்லாவற்றையும் நான் பார்த்து, பழகி அதன் மூலமாகவே எனக்கு படிப்பினைகள் கற்று தந்தார். இனி வருங்காலத்தில் அகத்தியர் அப்பா என்னை எவ்வாறு வடிவமைக்கப் போகிறார் என்று ஆவலோடு காத்திருக்கும் அவரது மகன் நான் மகேந்திரன்.