Tuesday, 21 September 2021

A DEVOTEE'S STORY 2 - அப்பாவும் நானும்-2

We continue with part 2 of a devotee's journey on the path of the Siddhas. Those who missed her introduction and part 1 can read it at https://agathiyarvanam.blogspot.com/2021/09/a-devotees-story-1.html

கர்மா பற்றிய புரிதல் தந்தது   

நம் வாழ்வில் வரும் சோதனைகள் தடங்கல்கள் துயரங்கள் அனைத்திற்க்கும் நாம்தான் காரணம். குறிப்பாகச் சித்தர்கள் மார்க்கத்தில் வரநினைப்பவர்களுக்கு அவர்கள் தரும் பதில் பெரும்பாலாகக் கர்மவினைதான். நம் கர்மவினை தான் நம் வாழ்விற்கே அடித்தளமாக அமைகிறது. ஆனால் பெரும்பாலும் நல்லவர்களுக்கே துன்பம் வருவதற்கு காரணம் என்ன? நல்லவர்கள் ஒரு நாளில் அப்படி பிறப்பதில்லை. எத்தனையோ பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவாகவே நல்லவர்களாகப் பிறக்கிறார்கள்.  நம் என்னதான் மற்றவர்க்கு உதவினாலும் நம் இன்னும் அல்லல்படுகிறோம் என்று நினைப்பவர்கள் அதிகம். 

அப்பா நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை ஆனால் நடைமுறைக்கு ஏற்றவாறு சிந்தித்து அறிவுறுத்துபவர். எனக்கும் பெரிய அளவில் அன்னதானமும் அனாதை இல்லம் நடத்த விருப்பம் இருந்தது. என்னால் எப்போதாவது முடிந்த  தானங்கள் செய்வதுண்டு. ஆனால் அப்பாவை வேண்ட ஆரமித்தபோது சிலவற்றை உள்ளிருந்து உணர்த்தினார். தினமும் என்னால் இயன்ற தர்மங்கள் செய்யத் துவங்கினேன். நம்மிடம் இருக்கும் நல் எண்ணங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவரின் எண்ணம். அதற்குக் காலம் இடம் வருவதற்கு காத்திருக்க தேவை இல்லை. இருக்கும் பொருள் வைத்து நம்மால் இயன்ற வரை செய்வதே அவர் எதிர்பார்க்கிறார். அப்படி செய்தும் வாழ்க்கை மாறவில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. அப்படி என்றால் அந்த வலிகளின் மூலம் அவர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்கிறார் என்று அர்த்தம். 

அப்படி எனக்கும் ஆத்ம பலத்தை ஏற்படுத்தினார் அப்பா.   சரியான வேலை அமையாமல் படிப்பும் அமையாமல் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். அடுத்த நாள் வாழ்வதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். “உன் பாதமே சரணம்” என்று இருந்த பொது சில சில தரிசனங்கள் இறை அருளால் கனவில் கிடைத்தது. அவர்களின் காட்சி தான் அடுத்த நாள் வாழ நம்பிக்கை தந்தது. சில மாதங்கள் பிறகு அகத்தியர் கனவில் வந்து உன் வாழ்க்கை இன்னும் இரண்டு மாதத்தில் மாறும் என்று கூறி மறைந்தார். அதன் பிறகே மேல் படிப்பு அமைந்தது.  படிப்பு முடிந்தவுடன் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை அமைந்தது. ஆனால் அன்று அவருக்கு நன்றி தான் கூறினேன். சில வருடங்களாக அதைவிட சற்று தரம் அதிகம் உள்ள வேலைக்கு முயற்சி செய்தேன். கிடைக்கவில்லை. வெளிநாட்டிலும் அமையுமா என்று எதிர்பார்த்தேன். அப்போது ஒரு நாள் அகத்தியரும் லோபாமாவும் என் கனவில் தோன்றி மலர்ந்த முகத்தில் ஆசி தந்தனர். நான் எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் மூன்று முறை முயன்றும் படுதோல்வி அடைந்தேன்.  விரக்தியின் உச்சம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் நம்மை இவ்ளளவு தூரம் கனவில் தோன்றியவர் அன்பை விட இது பெரிதா என்று எண்ணி  இறைவன் விட்ட வழி என்று சென்று கொண்டிருந்தேன். இப்படியாக மூன்று வருடங்கள் மொத்தம் ஏழு வருடங்கள் படிப்பு இருந்தும் நிலையான வேலை இல்லாமல் சிரமப்பட்டேன். 

ஒரு நாள் எதிர்பாராத விதமாக நான் செய்து கொண்டிருக்கும் வேலைக்குச் சம்மந்தம் இல்லாத அரசு வேலை அமையும் வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த ஏழு வருடங்கள் அனுபவம் அதைப் பெரிதாக நினைக்க விடவில்லை. சந்தோஷமும் இல்லை கர்வமும் இல்லை. உன் பக்தராக இருந்து உனக்கு இதுமூலம் எனச் செய்யவேண்டுமோ செய்துகொள்ளுங்கள் அப்பா என்றுதான் தோன்றியது. மனம் மரத்து போகவில்லை ஆனால் இது உண்மை இல்லை உண்மை வெறும் அப்பாதான் என்று தெளிவாக இருந்தது.  ஒரு பிச்சைக்காரனுக்கு தங்க புதையல் கொடுத்தால் எவ்வளவு கூத்தாடுவான். ஆனால் அப்போது எனக்கு அந்தப் புதையல் கொடுத்த தெய்வம்தான் உண்மையான புதையல் என்றே தோன்றியது. அந்த வேலையும் இழந்தால் பரவாயில்லை எப்படியோ எதாவது செய்து உண்மையாக வாழலாம் ஏனென்றால் இறைதான் நம் கஷ்டத்தில் கூடஇருப்பாரே என்று தோன்றியது.  

“தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை” என்ற பாடல் வரிக்கேற்ப அவர் தந்தார் ஆனால் பெரிய போராட்டத்திற்கு பிறகு தான். நான் முன்ஜென்ம வினைகளால் இதை அனுபவித்தாலும் இந்தப் பிறவியில் அப்படி ஒன்றும் எனக்குக் கீழ் இருப்பவர்களைத் துச்சமாக மதித்ததில்லை. பிறகு ஏன் இவ்வளவு போராட்டம்?  

 “எதனைக் கேட்டால் உன்னையே தருவாய்?”   அப்பா எவ்வள்வு இருந்தாலும் இனி இமயம் போல் புகழ் வந்தாலும் உன் தரிசனம் கிடைத்த நாட்கள்போல் வருமா? இப்பொது ஆன்மா அவர் மட்டுமே நிஜம் என்று உணர்ந்து துக்கம் ஆனந்தம் இரண்டிற்கும் ஒரே மாதிரி எதிர்வினை தான் புரிய நினைக்கிறது. அப்படிதான் ஆன்ம பலம் பெற்றதாக உணர்கிறேன். கர்மவினை கழிப்புக்காக மட்டும் அல்ல. இறை வழியில் வரும் நல்லவர்கள் இன்னும் இறை அருகில் வர அவர்களின் ஆன்மாவை இறைவன் தயார்ப்படுத்தும் வழிமுறையாகவும் கொள்ளலாம்.