அப்பாவும் நானும்
இந்த உலகத்திலேயே விலைமதிக்க முடியாததும் எளிதில் கிடைக்காததும் எது?
பணம் ? அதிகாரம் ? நிம்மதி ? சந்தோசம் ? நினைத்த மாதிரி வாழ்க்கையா? இல்லை?
உண்மையான அன்பு. இந்த உலகில் பிரதேக்கியமாக அதைத் தருவது அம்மா. ஆனா அம்மாவிற்கு எப்படி இவ்வளவு அன்பு? அவளின் தாய்மையினாலே தானே இவ்வளவு அன்பு. எதையும் எதிர்பார்க்காத அன்பு, எதுவும் தனக்காக வேண்டாத மனம், கருணை, கண்டிப்பு, இவையெல்லாம் தானே தாய்மை. வார்த்தை வராத குழந்தை அழுதால் பசியா தூக்கமா ஏக்கமா என்று அறிவாள். தோல்விகளால் மனம் உடைந்து அழும் 50 வயது மகனையும் /மகளையும் தேற்றுவாள். எந்த வயதிலும் தன் மக்களையே சிந்திக்கும் தாய் தானே உண்மையான அன்பின் வெளிப்பாடு. தாய் மட்டும் அல்ல தாய்மையுடன் செயல் படும் அணைத்து மனிதர்களும் அந்தத் தாய்க்கு சமம் தான். அவர்கள் அனைவரும் உண்மையான அன்பின் வெளிப்பாடு தான்.
ஒரு குடும்பம் ஒரு சமூகம் ஒரு நாடு இவற்றை அன்பால் நேசிக்கும் மனிதர்களுக்கே இந்தப் பரிவும் தாய்மையும் உண்டு என்றல், இந்த அகிலத்தை காத்து, சின்ன சிறு எறும்புக்கும் ஆறறிவு கொண்ட மனிதனுக்கும் களிற்கு கூடத் தன் அன்பை பொழியும் அந்த இறைவனின் தாய்மைக்கு அளவு உண்டா?
அவரல்லவா இந்த மனிதர்கள் ரூபத்தில் வந்து தாய்மையை தருவிப்பது…!!! அவருக்கு இல்லாத பெருமையும் புகழும் யாருக்கு உண்டு? அந்த இறைவன் தன் மக்களுக்குத் தரும் மிகப் பெரிய பரிசு கொடை - அவரே தான்.
அப்படி இந்த உலகை ஆளும் என் தந்தை என் வாழ்வில் நிகழ்த்திய உண்மைகளே- அப்பாவும் நானும்.
தோல்விகள் பயத்தை உண்டாக்கும். சில தோல்விகள் வாழ்வையே தலைகீழாகி விடும். அப்படியொரு தோல்வி வரும் என்று அறிந்து என்னிடம் முன்னதாகவே நாடி சொல்லும் கதைகளாக வந்தார் அப்பா. பயம் மட்டுமே கண்ட நாட்கள் என்ன திசை செல்வது என்று தெரியாத படகுபோல் இருந்தேன். அப்போது தான் ஹனுமத்தாசன் ஐயாவின் புத்தகம் படித்தேன். அப்போது தான் அகத்தியர் பற்றித் தெரிந்தது. எத்தனையோ பேர் வாழ்வை மாற்றியவர் என் வாழ்வை மாற்றமாட்டாரா என்று நம்பினேன். அவரை வேண்டினேன், தேடினேன். அதுவரை சில வருடங்கள் சுவடி வாசிக்க அனுமதி அளிக்கவில்லை அப்பா. அவர் மனம் கனிய அவரையே சரணடைந்து தேடினேன். ஒரு நாள் ஒரு மலை அருவியிலிருந்து அகத்தியர் இறங்கி வருவது போலக் கனவு கண்டேன். மிகவும் ஆனந்தப்பட்டேன் அப்பாவின் தரிசனம் கிடைத்தது என்று. ஆனால் அப்போது அவர் வரம் தர வருகிறார் என்று உணரவில்லை. அன்று சித்தனருள் வலைத்தளத்தில் கல்லார் ஆஸ்ரமத்தில் சுவடி வாசிக்க அகத்தியர் அனுமதி கொடுத்த செய்தி வந்தது. அன்று தான் உணர்தேன் அப்பா சரணடைந்ததால் மலையிலிருந்து இறங்கி வாழ்வை மாற்றியமைக்க வருகிறேன் என்று கூறவே கனவில் வந்தார் என்று.
கல்லாரில் என் தந்தை வசிக்கிறார் என்று நான் உறுதியாக நம்பினேன். சுவடி வாசிக்கச் சென்றேன். கனவில் வந்த கருணை சுவடியில் விவரிக்கவில்லை. முன் ஜென்ம வினைகளின் தொகுப்புகள் மட்டுமே தந்து அதை விலக்கச் சில பிரார்த்தனைகள் சொன்னார். இறை நம் கனவில் வருவார் அவரை உணரும் உணர்வு உள்ளவர் என்ற கர்வம் தவிடு பொடியாக்கினார். நாமும் வினைகள் கொண்டு எப்படியாவது இறைவனை தொட போராடும் சாதாரண ஆன்மாவே என்று உணரவைத்தார். ஆனால் அவர் சொன்ன பிரார்த்தனைகள் செய்தவுடன் நான் வணங்கிய, தெரிந்த அனைத்து தெய்வங்களும் என் கனவில் தோன்றி வழிநடத்தினார்கள். கர்வம் இல்லை ஆனால் அனைவருமே என் மக்கள் நானே வந்து வழிநடத்துவேன் என்று இறைவன் புரியவைத்ததாக உணர்தேன்.
வாழ்க்கை உடனடியாக மாறவில்லை ஆனால் அப்பா இருந்ததால் பாரமாக இல்லை. ஒரு நாள் கூறிய பிரார்த்தனைகளைக் கூட முடிக்கமுடியவில்லை. அப்போது மனம் வேதனைப்பட்டு அப்பாவிடம் பேசிவிட்டு சென்றேன். மனம் தானே பிரச்சனை என்று நினைத்தவர் அன்று ஒரு நாள் மனமே இல்லாத தியான நிலைக்கு என்னை மாற்றினார். நான் பத்மாசனம் இடவில்லை. மூச்சு பயிற்சி செய்யவில்லை. உட்காரவில்லை. ஆனால் மனமே இல்லாமல் நினைவுகளே இல்லாமல் ஆனந்தமாக இருந்தேன். உண்மையான உற்சாகம் ஆனந்தம் கிடைத்தது. எவ்வுளவோ முயன்றும் மனம் சிந்திக்க மட்டும் மாட்டேன் என்றது. எத்தனையோ பேர் கடுமையான பயிற்சிகள் செய்து பெறும் அனுபவம் எனக்கு அவரே தந்தார், இதை நோக்கித்தான் செல்ல வேண்டும் என்று உணர்த்தினார். அதுவரை விரக்த்தியில் இருந்த நான் உற்சாகம் அடைந்து மீண்டும் இறைவன் மீது இருந்த அதிருப்தியை நீக்கினேன். அன்று இரவு A.C. மிகவும் குளிர்த்தந்தது. அந்தக் கயிலையில் வாழும் ஈசன்கூட இந்தக் குளிர் தாங்கமாட்டார் என்று நினைத்து உறங்கினேன். அந்த இரவு ஈசன் கனவில் வந்து இப்போதுதான் என் நினைவு வந்ததா என்று வினவினார், பயந்து இல்லை அப்பா நீங்கள் இல்லாமல் எதுவம் இல்லை என்று வணங்கினேன். நம் நினைவைக் கூட அவர் அறிவார்.