Friday, 24 April 2026

மஹேந்திரனின் பயணம்


அகத்தியரோடு எனது பயணம்

டிசம்பர் 20, 2013 எனது சரியைக்காணப் பயணத்தின் தொடக்கம்.

அன்று தான் நான் முதல் முறையாக எனது நண்பர்களோடு அகத்தியர் வனம் மலேசியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டது அகத்தியர் உருவில் சிவனை. பின்னர் நான் ஷண்முகம் அண்ணனிடம் என்னைப் பற்றிப் பகிர்ந்து கொண்டேன். அன்று நான் அறியாதது எனது வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் வரும் என்றும் அவை அனைத்தும் அகத்தியர் அப்பாவின் செயல் என்றும்.

ஆரம்ப நிலையில் நான் அகத்தியர் வனத்துக்கு மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செல்வது வழக்கம். அவை அங்கு நடைபெறும் சித்தர்கள் பூஜையில் கலந்து கொள்வதற்கு. பின்னர் காலப்போக்கில் நான் அகத்தியர் வனம் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டேன். ஏனெனில் அங்கு ஷண்முகம் அண்ணனின் சித்தர்கள்மீது உள்ள ஆர்வம், அவர் சேகரித்து வைத்திருந்த அவரது அனுபவங்கள் எல்லாம் என்னையும் ஒரு புதிய பாதைக்குள் தள்ளியது. அதிசயங்கள் விரும்பாத மனிதன் இல்லை என்பதற்கு ஏற்ப நானும் அங்கு நடந்தேறும் அதிசயங்களைக் கண்டு வியப்புற்றேன். ஒரு ஐம்பொன் சிலை (அகத்தியர் வனம் அகத்தியர் அப்பா) மனிதனைப் போலவே இரு கண்களையும் திறந்து இருப்பதை நான் முதலில் பாலச்சந்திரன் காண்பித்த புகைப்படம் மூலமாகக் கண்டேன். அதே அதிசயம் நாங்கள் அகத்தியர் அப்பாவிற்கு அபிஷேகம் செய்யும்பொழுது கண்டு வியந்து மகிழ்ந்தேன். இந்த அதிசயம் என்னை இன்னும் இப்பாதைக்குள் அதிகமாகவே தள்ளியது.

அங்கு நான் செல்லும் பொது எல்லாம் ஷண்முகம் அண்ணன் அவரது தேடல்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார். எனக்குள் ஒரு கேள்வி எப்பொழுது நாமும் இவரைப் போலவே இந்தப் பயணத்தின் அனுபவங்களைச் சேகரிப்பது. நான் வாடிக்கையாகச் செல்வதால் பூஜைக்கான தயார்நிலைகளை நான் கற்றுக்கொண்டேன். பின்னர் நானே அவைகளைச் செய்யத் தொடங்கினேன். ஹோமம், அபிஷேகம், அலங்காரம், போற்றி பாடல்கள் என முழுமையான பூஜை முறைகளை நான் அவரிடம் மற்றும் மகேஸ்வரி அம்மாவிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன். இவர்கள் இருவரிடமிருந்து நான் பல அற்புதமான பாடங்களைக் கற்றுவந்தேன். 

இப்படியே வருடங்கள் புரண்டு ஓட, நான் எனக்குள் பல மாற்றங்களை உணரத் துவங்கினேன். 2013 முதல் 2019 வரையிலும் சரியை கற்றுவந்த நான் 2019 துவக்கத்திலிருந்து கிரியைக்கான பயிற்சியினை அகத்தியர் அப்பாமூலம் ஷண்முகம் அண்ணன் வழிவிட நானும் எனது தோழி மலர்வதியும் தினம்தோறும் அகத்தியர் வனம் சென்று யாகம், அபிஷேகம், அலங்காரம் என அனைத்தையும் நாங்களே செய்யத் தொடங்கினோம். அகத்தியர் அப்பாவை அலங்கரிக்கும் பொறுப்பு என்னிடம் வர நானும் அகத்தியர் அப்பாவின் ஆசியோடு அவரைப் பல விதங்களில் அலங்காரம் செய்து மகிழ்ந்தேன்.

இன்னும் சொல்லப்போனால் 2019 எங்களுக்கு ஒரு அற்புதமான பயணமாகவே அமைந்தது. ஷண்முகம் அண்ணன் கூறிய அவரது அனுபவங்கள் இப்பொழுது எனது அனுபவமாக மாறியது. அவரது பயணத்தில் நாங்கள் இணைந்தது எங்களுக்கு ஒரு பெரிய பலத்தையும் நம்பிக்கையும் தந்தது. அவரது வாலிப வயதில் தொடுத்த கேள்விகளைச் சிவபெருமான் கனவில் வந்து கேள்விகளைப் பின்னர் ஒத்திவைக்கச் சொல்லியதும், இப்பொழுது அதற்கு விடையளிக்கும் பொருட்டு எங்களுக்கு அவை பாடமாக அமைகிறது. அதற்கு நான் சிவபெருமானுக்கு நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு இருக்க நாடிகள் மூலம் எங்களுக்கு வாக்குரைத்த அகத்தியர் அப்பா, தனது பக்தர்கள் மூலமாகவும் எங்களை வழிநடத்த ஆரம்பித்தார். ஷண்முகம் அண்ணனின் இரு குருக்களும் (சுப்பிரமணிய சுவாமி / தவயோகி), பின்னர் எனக்கும் குருவாக அமைந்த தவயோகி, அப்பாவின் மறைவுக்குப் பிறகு எங்களை அகத்தியர் அப்பாவே நேரடி சீடனாக ஏற்றுக்கொண்டார் போல் அவர் எங்களுக்கு அவ்வப்போது தரிசனம் தந்து வழிநடத்தி வருகிறார்.

கிரியை என்பது வெறும் பூஜை என்பது அல்ல, பிறருக்குத் தொண்டுகள் செய்வதும் தானென உணர்த்தி, பாலச்சந்திரன் தலைமையில் நாங்கள் ஆறு பேர் (பாலச்சந்திரன், நான், தயாளன், சுகுமாரன், மலர்வதி, சஹாலினி) சேர்ந்து ஒரு குழு அமைத்து எங்களால் இயன்ற தொண்டினை செய்து வந்தோம். வீதியை இல்லமாய் கொண்டு வாழ்பவர்களுக்கு உணவு கொடுப்பதும், பிள்ளைகளின் அறுவை சிகிச்சைக்குப் பணப் பற்றாக்குறையாக இருப்பவருக்கு முடிந்ததை தருவதும், கல்வியினை தொடங்குவதற்கு மாதம்தோறும் பண உதவியும், முதியோர் இல்லம்/சிறுவர்கள் இல்லம் சென்று உணவு தருவது, விளையாட்டு எனச் சிறிய அளவில் செய்து வந்தோம். அதனைத் தொடர்ந்து ஷண்முகம் அண்ணன் அமுதசுரபியென மற்றொரு குழு தொடங்க, நாங்கள் அவரோடும் இணைந்து எங்களால் முடிந்த சேவைகளை இந்நாள் வரை செய்து வருகிறோம். நான் கடந்து வந்த பாதையில் சிறிய அளவு கசப்பான சம்பவங்கள் எனக்குப் பெரிய அளவில் பார்க்கத் தோன்றியது. என்று நாங்கள் வீதியில் இருப்பவர்கள், அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் மனிதர்கள், ஒரு வேளை மட்டுமே பிள்ளைகளுக்கு உணவு தரும் குடும்பங்கள் என்ன பலரைக் கண்டபொழுது, நான் கடந்து வந்தது யாவும் வெறும் கானல் நீர் என்று உணர வைத்தார் அகத்தியர் அப்பா. அன்று முதல் ஒரு உத்வேகம் எனக்குள் பிறந்தது, வரும் இன்னல்களைக் கண்டு வருந்துவதை விட, அதனைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே சரி என்று உணர்த்தினார்.

இவ்வாறு அகத்தியரோடு பயணம் சுமுகமாய் போக, யோகத்தின் பயிற்சி ஆரம்பமானது. இங்குதான் அகத்தியரோடு பயணம் குழுவாக அல்ல தனி மனித பயணம் என உணர்த்த ஆரம்பித்தார். ஆறு வருடமாகக் குழுமுறையில் செய்தவையாகவும் இப்பொழுது தனித்துச் செய்ய வேண்டும். தொண்டுகள் இதில் அடங்காது. தனி மனித பயணம் என்பது தன்னைத் தானே அறிந்துகொள்வது. எவ்வாறு நான் என்னை நானே அறிவது என்ற கேள்விக்கு அகத்தியர் அப்பா சொல்லியது தியான முறை. நம்மை நாம் அறிவதற்குச் சித்தர்கள் சொல்லித்தருவது தியானப் பயிற்சி. நம்மைத் தனிமைப் படுத்தி தினமும் ஒரு முறையாவது இறைவனை நோக்கி மன அமைதியோடு தியானம் செய்து வந்தால், அதன் பலனாக நம் பிறப்பின் நோக்கமும், அதன் பயனும் அறிவோம் என்று உணர்த்தினார். ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல, அதற்கு நம் மனம் பக்குவப் படவே, சரியை, கிரியையென இரண்டு வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து வந்தார். சரியையில் நாம் எவ்வாறு நம்மை ஒழுங்கு படுத்துவது என்றும், கிரியையில் நம்மை எவ்வாறு செயல் பட வேண்டும் என்றும் சொல்லித் தந்தார். அதற்கு ஐந்து கொள்கைகள், ஆறு புலன்களை அடக்குவதும், மும்மலத்தை ஒழிப்பதும் எனக் கற்றுத்தந்தார்.

ஐந்து கொள்கைகள்:

- பிறப்பின் நோக்கம் அறிதல்

- குலதெய்வம், காவல் தெய்வம், குருவிடம் பக்தி செலுத்துதல்

- முன்னோர்கள், பெற்றோர்களை மதித்தல்

- எல்லா உயிரினங்களையும் மற்றும் பொருட்களையும் இறை நிலைக்குக் கொண்டு வருதல்

- தர்மம் செய்தல்

ஆறு புலன்கள்:

- பொறாமை

- காமம்

- பெருமை

- கோவம்

- வெறுப்பு

- பற்று

மும்மலம்:

- ஆணவம்

- கர்மம்

- மாயை

மும்மலம் ஆகிய ஆணவம் கர்மத்தை அழிக்க மாயை என்னும் திரை தானே விலகிப் போகும். அவ்வாறு ஆணவம், கர்மம், மாயை விலகிப் போக நமக்குள் சுழன்று இருக்கும் ஆறு புலன்கள் யாவும் பட்டுப் போகும். மும்மலம் அழித்து, ஆறு புலன்களும் பட்டுப் போக, நம்மால் அகத்தியர் கொடுத்த ஐந்து கொள்கைகளைச் சரிவரச் செய்ய முடியும். இவ்வாறு எவன் ஒருவன் இவை அனைத்தும் தனது கொள்கையாகக் கொண்டு அதற்குச் சக்தி கொடுத்து முழு முயற்சியாகச் செய்து வருகிறானோ அவனுக்குத் தியானத்தில் தெளிவு கிடைத்து, தன்னை அறிவானென எனக்கு அகத்தியர் அப்பாவால் உணர்த்தப்பட்டது. இன்று வரை எனது பயணம் யோகத்தை நோக்கி இருக்கிறது, அகத்தியர் அப்பா ஆசியோடு யோகத்தின் பயிற்சியும் சரிவரச் செய்து முடித்து ஞானத்திற்குச் செல்லும் வழியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அகத்தியர் அப்பாக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

2014 இல் தொடங்கிய பயணம் இது. தற்போது வயது 34 ஆக இருந்தாலும் சித்தர்களோடு பயணத்தில் நான் இன்னும் பத்து வயது மாணவனே. இந்தப் பயணங்களில் பல ஜாம்பவான்கள் இருக்கையில் நான் என்னுடைய பயண மாற்றங்களையும், அதிலிருந்து நான் கற்றவற்றையும் விட்டவற்றையும் பகிர்வதால் ஏதேனும் பிழைகள் இருந்தால் வாசகர்களைப் பொறுத்தருளக் கேட்டுக்கொள்கிறேன்.

சரியையில் தெய்வத் தொண்டினை நாமே நம் கைப்பட செய்யச் சொன்னார் அகத்தியர் அப்பா. ஹோமம், அவருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய் வேத்தியம் மற்றும் தீபாராதனையென ஆலய வழிபாட்டினை நடுவராக ஒரு ஆகமம் முறை வந்த குருக்கள் இல்லாது நானே என் கைப்பட செய்ய ஊக்குவித்தார். இதில் எனக்குக் கற்றுத் தந்த பாடம் சித்தர்களோடு இணைவதற்கு நமது உள்ள தூய்மை மட்டும் போதும் என்று.

சித்தர்களோடு இணைந்து விடுகிறோம். சித்தர்களும் நம்மோடு உலவத் தொடங்கிவிடுகிறார்கள். எதற்கு? நாம் அவர்கள்வசம் இருக்கும் அவர்கள் நம்மைக் கண்காணிப்பர்.

கிரியையில் சக மனிதர்களுக்கு உதவிக் கரம் நீட்டக், குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், வீதியில் வசிப்பவர், பிறகு குடும்பமாக வசித்தாலும் வருமான பற்றாக்குறையால் வாடுவோர் என எல்லா தரப்பு மக்களையும் நேரே கண்டு பசி ஆற்றும் பாக்கியத்தை அளித்தார். இதில் எனக்குக் கற்றுத் தந்த பாடம் எனது வாழ்க்கையில் ஒரு போதும் குறை கூறும் அளவுக்கு உடலாலோ, மனதாலோ, சிந்திக்கும் ஆற்றலில் எவ்வித குறைபாடுகளும் தரவில்லையே பிறகு எதற்கு வாழக்கூடிய வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டே வாழ வேண்டும் என்று தான்.

சரியையும் கிரியையும் சித்தர்களோடு நமக்கும் உள்ள உறவினை வலுப்படுத்தவும், கர்ம வினைகளைப் போக்கவும், சிந்தனையை நெறிப்படுத்தவும், இருப்பதைக் கொண்டு நடப்பவற்றை அற்புதமாக மகிழ்ச்சியாகப் பார்க்கப் பழகிக் கொள்வதற்குத் தரப்பட்டவை. இதை நான் அறிந்து உணர்ந்து கொண்டு செயலாக்கம் செய்வதற்கு அகத்தியர் அப்பாவும் மற்ற சித்தர்களும் எடுத்துக்கொண்ட அவகாசம் 5 வருட காலம்.

உணர்ந்த பிறகு அதை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தேன். முதலில் பெருமகிழ்ச்சி நம்மை அறியாது நம்மை ஆட்கொண்டு கர்வம் கொள்ளச் செய்யும். அதுவே பிறகு நம்மை யோகத்திற்கும் ஞானத்திற்கும் செல்வதற்குத் தடையாக இருக்கும். எனவே அகத்தியர் உணர்த்திய உடனே என்னைச் சரியை கிரியை இரண்டையும் நிறுத்திப் பயண மாற்றம் செய்தார்.

2019 யோக பயணத்தின் தொடக்கம். தவயோகி அப்பா சொல்லித் தந்த மூச்சுப் பயிற்சி குருவாக ஷண்முகம் அண்ணன் சொல்லித்தர நானும் தவறாது இடைவிடாது செய்துவர உடலில் பலவித மாற்றங்களை உணரத் தொடங்கினேன். வாத பித்த கபம் என்ற மூன்றும் சரிபடும்போது என் உடல் தேக்கிவைத்துக் கொண்டிருந்த கழிவுகள் அகன்று போகக் கண்டேன். இந்தக் காலகட்டங்களில் உடலில் உட்கரிக்கப்பட்ட நோய்களை எல்லாம் வெளியே கொண்டு வந்து அதற்கான சிகிச்சை முறைகளையும் அவ்வப்போது வந்து காண்பித்து, மருத்துவரிடமும் அனுப்பியும் வைத்தார் அகத்தியர் அப்பா. இதில் நான் கற்ற பாடம் உடல் உறுதி பெற்று வலிமையுடன் இருந்தால் வாழ்க்கை சிறக்கும். ஞானத்திற்கான பயணம் எளிதாக இருக்கும்.

யோகமும் ஞானமும் தனிப்பயணம் அல்ல. இரண்டுமே ஒன்று கலந்தே இருக்கும். உடலை வளைக்கும் போதே உள் பயணம் செய்ய வலியுறுத்தினார் அகத்தியர் அப்பா. தியானமே முதல் படி உள் பயணம் கொள்வதற்கு. அதற்கு உடலை வருத்திக்கொண்டு அமரக் கூடாது. எனவே உடல் வளைக்கக்கூடிய பயிற்சிகள் தந்தபிறகு அமரச் செய்யும்போது உடல் இலகுவாக இருக்க மனதைக் கட்டுப்படுத்த மட்டுமே தியானம் இருக்கும். அதற்குச் சுவாசத்தை மட்டுமே கவனம் இருந்தாலும் அலைபாயும் மனதைக் கட்டிப்போட எண்ணத்தை மட்டும் திரும்பத் திரும்பச் சுவாசத்திற்குக் கொண்டு வந்து, கவனம் கொண்டு உணர்த்தலோடு செய்ய வேண்டும். இப்படிச் செய்ய நம்மை அறியாது நமது சிந்தனைகள் காணாமல் போக வெறும் சுவாசம் மட்டுமே நிலைத்திருக்கும். அவ்வப்போது புருவ கூச்சல்கள் வந்தாலும் தள்ளி வைத்து விட்டு மீண்டும் சுவாசத்தையே கண்காணிக்க வேண்டும். இதில் நான் கற்ற பாடம் தன்னை அறிந்தால் இன்புறலாம் மற்றும் அதன் தந்திரத்தையும் உணரலாம்.

சரி இப்போது அகத்தியர் அப்பா என்னை எங்குக் கொண்டு செல்கிறார் என்ற கேள்வி வரலாம். தற்போது யோகத்தையும் ஞானத்தையும் செய்துவர அவ்வப்போது அகத்தியர் அப்பா வாக்கு உரைக்கப் பக்தர்கள்மீது வருவதையும், என்மீது வருவதும் நடைபெற்றுக் கொண்டிருக்க, மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயையிலிருந்து விடுபடத் தனது பக்தன் பரிபூரணம் அடைந்தபின் அவர்களுக்குள் வாக்கு உரைக்க வருவதையும் ஒரு மாயையென உரைத்து அதனை அடக்கிக் கொள்ளும் வல்லமை பெறவும், அதற்கு ஆன்மீக பயணத்தைத் துவக்கியுள்ளார்.

ஆரம்பக் கல்வி ஆகவே இதைப் பார்க்கும் வேளையில் இதுவரை நான் பலமுறை நான் நான் என்று என்னை அடையாளப்படுத்திக்கொண்டதை நிறுத்தும் வகையில் ஒரு புதிய அனுபவ பயணம் நடைபெறுகிறது. நான் என்ற ஆணவம் அழியும்போது மாயை என்ற திரை விலகி எப்படி ரமண மகரிஷி நான் வேறு அல்ல நீ (இறைவன், அருட்பெருஞ்ஜோதி, பிரபஞ்சம்) வேறு அல்ல என்ற நிலைக்குக் கொண்டு செல்லும் நிலை தற்போது. கன்மம் மட்டும் சரியை கிரியையில் முற்றிலும் சித்தர்களின் அருளால் போக்கப்பட்டு யோகத்திற்கும் ஞானத்திற்கும் பயணிக்கச் சித்தம் ஆகிறோம்.

சித்த பயணத்தை இருவகைகளாகப் பிரிக்க, ஒன்றாவது மனித நெறி பயணம் இதற்குக் குருவின் தேவை சரியை கிரியையோடு நின்று விடும். பிறகு அந்தச் சீடன் கற்றவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலே போதும். உணவிலோ உடையிலோ மாற்றம் தேவை இருக்காது, மனத்தினையும் ஆசைகளை மட்டும் கையாள வேண்டும். தொடர்ந்து சரியை கிரியை செய்து வரலாம். உலக வாழ்க்கைக்கான ஞானம் கிட்டுமே தவிர ஒளி பயணத்திற்கு வழிவகுக்காது.

இரண்டாவதாக ஞான பயணம்/ஜோதி பயணம். இதற்கு உடல், உள்ளம் தூய்மை பெறுவது அவசியம். புலால் உண்ணுதலை தவிர்க்கும் பட்சத்தில் முதல் உடல் தூய்மை ஆரம்பமாகிறது. பிறகு கடுமையான வைராக்கியம் வேண்டும். சித்தர்கள் கொடுக்கும் பயிற்சிகளை விடாமல் செய்வதும், சொல்லிய பொழுதே செய்வதும், ஏன் என்ற கேள்விகளின்றி நிறுத்தவும் வேண்டும். இது அடுத்தகட்ட தூய்மை. பிறகு, மனத்தூய்மை செய்யத் தியானம் செய்து வர ஆன்மாவோடு பேசத் தொடங்க வேண்டும். இவ்வகை செய்யும்வண்ணம் சிந்தனை தூய்மையும் செய்தாக வேண்டும் எனில் இங்குதான் சித்தர்களும் பூதகணங்களும் தேவலோகர்களும் நம்மோடு மாய விளையாட்டைச் செய்யத் தொடங்குவார்கள். ஆகவே இதற்கு நாம் குருவைத் தேடுவதை விட நாம் செய்யக்கூடிய சரியான கிரியையைக் கண்டு நம்மைக் குருத் தேர்வு செய்வார். அவர் நம்மை அந்த மூலப் பொருளுக்கே கொண்டு செல்லும் வரை வழிநடத்துவார். தான் வழிபடும் மூலத்தையே நமக்கு அடையாளம் காட்டிவிடுவாரே ஒழியத் தன்னை போற்றிட ஒரு போதும் சொல்வதில்லை. இவ்வாறே நம்மைத் தேர்வு செய்த குரு யார் என்று நாம் கண்டு கொள்ளலாம்.

எந்தப் பயணத்தை நாம் தேர்வு செய்கிறோமோ அதன் படியே பயணமும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒப்பிடுதல் ஒருபோதும் ஆன்மிக பயணத்தில் இருக்கக் கூடாது. நாம் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு பொழுதிலும் சித்தர்களின் ஞான பாடங்களும் அற்புதங்களும் இருப்பதை உணர்தலே நமது பயணம் சிறப்பு மிக்க பயணமாக அமையும். அதனை நம் சிந்தை கொண்டு தவயோகி அப்பா சொல்லியதுபோல் “மாயையின் விளக்கம் புரிந்து அதை மனதிலே இருந்து ஒடுக்கித் தள்ளித் தத்துவ விசாரத்தால் வெற்றியடைய வேண்டும்”.

குருவின் வழியில் சீடன்

யார் எனது குரு என்ற கேள்விக்குப் பதில் தருவதற்கு முன்பு, நான் எவ்வாறு சித்தர்களைப் பூஜிக்க ஆரம்பித்தேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

2013 எனது நண்பன் பாலச்சந்திரன் அகத்தியர் நாடி வாசிப்பு கண்டு வர, அவர் என்னையும் மற்ற நண்பர்களையும் அகத்தியர் நாடி பார்க்க வலியுறுத்தினார். அப்பொழுது அகத்தியர் யார் என்று எனக்குத் தெரியாத நிலையில் நான் பாலச்சந்திரனிடம் இப்போது வேண்டாம், பிறகு தக்க தருணம் வரும் நிலையில் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

அப்பொழுது நான் சிவன் மற்றும் அம்மன் வழிபாட்டில் (பக்தி வழிபாடு) இருக்க, நாடி பார்க்கும் ஆவல் என்னிடம் இல்லை. அதையும் தாண்டி நாடிகளை வாழ்க்கையில் கஷ்டங்கள் இருப்பவர்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்ற அசட்டுத்தனமான எண்ணம் இருந்தது.

பக்தி மார்க்கத்தில் இருந்ததால் எனது சிறுவயதில் கோவிலுக்குச் செல்லும் வழக்கம் அதிகமாகவே இருந்தது. அதைத் தொட்டு கோவில் அர்ச்சகர் சிறிது காலம் தன் தாய்நாட்டுக்கு செல்ல, என்னையும் எனது அண்ணனையும் கோவிலில் பூஜை செய்யும் வாய்ப்பு தந்தனர். அப்பொழுது நான் என் அம்மனோடு பேசுவது என ஒரு அம்மா மகன் உறவை வளர்த்துக்கொண்டேன்.

அன்று முதல் நான் எந்தக் காரியம் செய்தலும் அம்மனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டு செய்வேன். அதைப்போலவே நாடி பார்ப்பதற்கும் அம்மாவின் உத்தரவு என்று கிடைக்கிறதோ அன்று பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தேன்.

அதன் பின்னர் பாலச்சந்திரன் எங்களை அகத்தியர் வனம் மலேசியாவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று தான் நான் முதல் முறையாக எனது குருவைக் கண்டேன், ஆனால் நான் உணரவில்லை அவர்தான் எனக்குக் குருவாக அமைவார் என்று.

சில மாதங்கள் கடந்துபோக நாடியினை காண வேண்டும் என்ற எண்ணம் வந்தது, அது அம்மனின் அருளாசி என்று கருதி நாடியை காண சென்றேன்.

அகத்தியர் அப்பா எனது முன்ஜென்மத்தில் நான் இலங்கையில் பிறந்ததாகவும், நான் சிறுவயதிலேயே பிரம்மச்சரியம் ஏற்று இறைவனை நோக்கிப் பயணம் செய்ததாகவும், பின்னர் பல குருமார்களிடம் வித்தைகள் கற்றுக்கொண்டு சிந்தை சறுக்கி பல கொடிய செயல்கள் புரிந்து மக்களுக்குக் கஷ்டங்கள் புரிந்திருக்கிறேன். எனது இறுதி காலத்தில் தவறினை உணர்ந்து வருந்தித் திருந்தி நற்செயல்கள் செய்து எனது கர்மத்தினை கழித்ததாகவும் கூறினார். ஆனாலும் கர்மாக்கள் குறைந்த வண்ணம் இல்லை என்று எனக்குச் சில பரிகாரங்கள் சொல்லினார். அதனை அடுத்து நான் தீவிரமாக அகத்தியர் அப்பா சொல்லிய பரிகாரங்களை செய்யத் துவங்கினேன்.

பின்னர் அவர் ஆசியோடு இந்தியாவிற்கு நண்பர்களோடு 14 நவம்பர் 2014 அன்று பரிகாரம் செய்யச் சென்றிருந்தேன். திருச்சி விமான நிலையம் அடைந்த நாங்கள் முதலில் தாய்வீடான கல்லாறு ஆஸ்ரமம் சென்று ஷண்முகம் அண்ணனின் குருவான தவயோகி அப்பாவையும் மாதாஜி அம்மாவையும் கண்டோம். இரவில் அங்கே தங்கிவிட்டு மறுநாள் சித்தர் பூஜையில் கலந்துகொண்ட பின்னர் ஜீவநாடி வாசிப்பு இருக்க நான் தயார் செய்து வைத்திருந்த கேள்விகளைக் கேட்க அப்பொழுதுதான் ஷண்முகம் அண்ணன் எனக்குக் குரு என்று அகத்தியர் அப்பா சொன்னார். அதுமட்டுமல்லாது தவயோகி அப்பாவும் எங்களைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டார். இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நான் எனது பரிகார பயணத்தைத் துவங்கினேன்.

பரிகாரங்கள் முடித்து மீண்டும் மலேசியா திரும்பிய நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றங்களைக் கண்டோம். பின்னர் ஷண்முகம் அண்ணனோடு எனது உறவினை நான் வலுப்படுத்திக்கொண்டேன். அன்றுமுதல் நான் அவருடைய அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்க அவரும் நான் அங்குச் செல்லும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். தவயோகி அப்பாவோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட பயணங்கள் யாவும் கேட்பதற்கு மிக அற்புதமாகவே இருந்தது. அங்கிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு எனது தினசரி வாழ்க்கையில் உபயோகம் செய்து வந்தேன்.

நெருங்கிப் பழகியவராக இருந்தாலும் கடினமாக இருந்தாலும் ஒன்று கேட்கும்போது என்னால் தட்டிக்கழிக்க முடியாது, உடனடியாகச் செய்துதர ஒப்புக்கொள்வேன். ஆனால் ஷண்முகம் அண்ணன் ஒருமுறை "NO" சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் அவை உங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும் என்று வலியுறுத்தினார். அப்பொழுது ஒரு தெளிவு பிறக்க என்னால் முடியாத ஒன்றினை நான் ஒப்புக்கொள்வதை நிறுத்திக்கொண்டேன். இப்பழக்கம் எனது தொழிலிலும் மற்றும் மற்ற உறவுகளிலும் எனக்கு மிக உறுதுணையாக இருந்தது.

இப்படியே எங்களின் உரையாடலில் நான் கற்றுக்கொண்டு பின்பற்றி வர எனக்குள் நல்ல மாற்றங்களைக் கண்டேன். உதாரணமாக, வீண் வாதம் செய்வதைக் குறைத்துக்கொண்டேன், கோபத்தைக் குறைத்துக்கொண்டேன், அதிகம் சிந்தித்து செயல்படத் தொடங்கினேன், முக்கியமாக அகத்தியர் அப்பாவோடு பேசக் கற்றுக்கொண்டேன். இறைவனாகப் பார்த்துப் பக்தி செலுத்தித் தூரமாகப் பார்த்த அகத்தியரை அப்பாவாக, அம்மாவாக, நண்பராக எனப் பல உறவுகளில் காண வைத்தவர் எனது குரு.

இவ்வாறு இருக்க, 2016 இல் தவயோகி அப்பா மலேசியாவுக்கு வந்திருக்க, நாங்கள் அனைவரும் அவரோடு அகத்தியர் வனம் மலேசியா நண்பர்கள் இல்லங்களுக்கு அகத்தியர் அப்பாவை அழைத்துச் சென்று பூஜை செய்தோம். அதேபோல் என்னுடைய இல்லத்துக்கு வருகை தந்த தவயோகி அப்பாவைக் கண்டதும் என்னை அறியாது ஓர் ஆனந்தத்தில் அவர் பாதம்பற்றிக் கண்ணீர் வடித்தேன், பிறவிப் பலனை அடைந்ததுபோல் அவ்வளவு ஆனந்தம்.

எனது இரு குருவும் எனக்குக் காட்டியது அவர்களது திறமையை அல்ல. அவர்கள் எனக்கு அகத்தியர் அப்பாவைக் காட்டி இவரைப் பற்றிக்கொள், அதுவே உனக்கு உறுதுணையாக இருக்கும் என்றுதான். அவர்கள் சொல்லியவாறே நானும் இந்நாள்வரை அகத்தியர் அப்பாவைப் பின்பற்றி வருகிறேன் மனநிறைவோடு. இவ்வாறு இரண்டு குருவினைத் தந்தமைக்கு நான் அகத்தியர் அப்பாவிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.