Wednesday, 28 November 2018

KADAVUL ENGE?

Bala Chandran shares a beautiful writing on where Erai is, which is circulating in Whatsapp. It is truly an eye opener. It brings a realization on the closeness of Erai that we all fail to see.

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

"வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ" என்றார்கள்.. குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே... ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்.. மேலே போவதற்கு...

அமைதியான வழி.. ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி... சம்பிரதாய வழி..
மந்திர வழி.. தந்திர வழி..
கட்டண வழி.. 
கடின வழி... சுலப வழி...
குறுக்கு வழி.. துரித வழி...
சிபாரிசு வழி... பொது வழி..
பழைய வழி.. புதிய வழி.. இன்னும்... இன்னும்... கணக்கிலடங்கா...

அடேயப்பா.... எத்தனை வழிகள்... ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..
கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

"என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை..." ஒதுக்கினர் சிலர்.. 

"நான் கூட்டிப் போகிறேன் வா... கட்டணம் தேவையில்லை.. என் வழியி்ல் ஏறினால் போதும்.. எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு... " என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

"மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்.. உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து"... என சிலர்..

"பார்க்கணும் அவ்ளோதானே... இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்.. அது போதும்..... அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏற முடியும்..."
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

"அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது.. உன்னால் ஏறமுடியாது... தூரம் அதிகம்.. திரும்பிப்போ... அவரை என்னத்துக்குப் பார்க்கணும்.. பார்த்து ஆகப்போறது என்ன.." அதைரியப்படுத்தினர் சிலர்...

"உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை.. ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும் அது ஒரு வழிப்பாதை... ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது... அப்படியே போவேண்டியதுதான்..." பயமுறுத்தினர் சிலர்...

"சாமியாவது... பூதமாவது.. அது வெறும் கல்.. அங்கே ஒன்றும் இல்லை.. வெட்டி வேலை... போய் பிழைப்பைப் பார்..." பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது... ஏறுவதா... திருப்பிப் போவதா...?

குழம்பி நின்ற என்னிடம் கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை அந்தக் கையில் வைத்தேன்..

"மவராசியா இரு..." வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து புன்னகைத்தார் கடவுள்..!!!!

"இங்கென்ன செய்கிறீர்..!!"

"நான் இங்கேதானே இருக்கிறேன்..."

"அப்போ அங்கிருப்பது யார்..?" மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

"ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்... எங்கேயும் இருப்பவனல்லவா நான்!இங்கே எனைக் காண முடியாதவர் அங்கே வருகிறார்... சிரமப்பட்டு!!!!..."

"ஆனால்".. திணறினேன்... "இது உமது உருவமல்லவே..."

"அதுவும் எனது உருவமல்லவே... எனக்கென்று தனி உருவமில்லை.. நீ என்னை எதில் காண்கிறாயோ அது நானாவேன்..."

"அப்படியென்றால்..??"

"வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே.... பசித்த வயிற்றோடு கைநீட்டியவன், உணவளித்த உன் கண்களில் காண்பதும் எனையே.. தருபவனும் நானே... பெறுபவனும் நானே... நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்... என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை.. மனதுதான் வேண்டும்..."

"அப்போ உனைப் பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறாயா??".. குழப்பத்துடன் கேட்டேன்..

"தாராளமாக ஏறி வா... அது உன் விருப்பம்... அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே.. அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.."

"கடவுளே"... விழித்தேன்... "எனக்குப் புரியவில்லை..."

"புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல... உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்.. என்னைக் காண, நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்... பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்... நீ இருக்குமிடத்திலேயே எனைக் காண்பாய்."

புன்னகைத்தார் கடவுள்!


போகும் பாதை தூரம் இல்லை, 
வாழும் வாழ்கை பாரம் இல்லை. 
சாய்ந்து தோள் கொடு, 
இறைவன் உந்தன் காலடியில். 
இருள் விலகும் அக ஒளியில். 
அன்னம் பகிர்ந்திடு! அன்னம் பகிர்ந்திடு!

நதி போகும் கூழாங்கல், பயணம் தடயம் இல்லை. 
வலி தாங்கும் சுமைதாங்கி, மண்ணில் பாரம் இல்லை. 
ஒவ்வொரு அலையின் பின், இன்னொரு கடல் உண்டு. நம் கண்ணீர் இனிக்கட்டுமே!

கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்? அன்னை பால் என்றாலே. அருளின் ஊற்றில் கண் திறந்தவர் யார்? இறைவன் உயிர் என்றாரே. 
வெரும் கை ஆசியிலும், இரு கை ஓசையிலும், புவி எங்கும் புன்நகை பூக்கட்டுமே!