Thursday 12 March 2015

IN THE COMPANY OF PERFECT BEINGS PART 2

Chellappa Sairam has  forwarded another writing from his friend Jai Ganesh.

மகிழ்போக உபதேசம் : 3
"அக்கறையோடு இரு, அவ்வப்போதே கவனித்துவிடு"

அந்த நல்லடியாரின் பாக்கு மணம் என்னை புதிய பாதையில் வழி நடத்தி செல்ல ஆரம்பித்தது. அவரை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தது. அவர் தனது வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருப்பார். நான் அவர் அருகில் அமைதியாக அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். இதுதான் எப்போதும் நடக்கும். நாங்கள் அதிகமாக பேசிக் கொள்ள மாட்டோம். அவரிடம் நிறைய பேர் தங்கள் குறைகளை சொல்வார்கள். அவரும் ஆறுதல்களையும் பரிகாரங்களையும் சொல்லி அனுப்புவார். அவரை சுற்றிலும் எப்போதும் நம்பிக்கையோடு ஒரு கூட்டம் இருக்கும். எல்லோருக்கும் எப்போதும் உணவு அளிப்பார். எங்களுக்கு உணவு வாங்கி வர சொல்வார். அந்த பொட்டலங்களை கவனமாக பிரிப்பார். ஒவ்வொரு நூல்களையும் அழகாக பிரிப்பார். அனைவருக்கும் அன்போடு கொடுப்பார். தண்ணீர் எடுத்து தயாராக வைத்து கொள்வார். உணவை வீண் செய்ய மாட்டார். நான் கவனித்த வரையில் அவர் என்ன செய்தாலும் ஒரு அக்கறையோடுதான் செய்வார். எங்களுக்கும் பரம திருப்தியான உணவுகாக அது திகழும்.

அப்போது பேசிக் கொண்டிருந்தபோது செய்யும் தொழில் பற்றி பேச்சு திசை மாறியது. எங்களில் ஒருவர் கேட்டார், "சாமி ... செய்யும் தொழிலில் ஜெயிக்க என்ன பண்ணணும்." அடியார் சொன்ன பதில் மிகவும் எளிமையானது. ஆனால் எனக்கு மிக உத்வேகம் தரும் உபதேசமாக அது அமைந்தது.

"நீ என்ன பண்ணாலும் அக்கறையோட பண்ணு"
"அப்பப்பவே கவனிச்சுடு"

நாம் இதை மிக கூர்மையாக கவனிக்க வேண்டும். அலட்சியமும், அஞ்ஞானமுமே மனிதனின் எல்லா துன்பங்களுக்கும் காரணம். விதி அல்ல. விதி என்பது என்ன? நமக்குள் பதிந்துள்ள வினைகள்தான். வினைகளில் இரண்டு வகை. ஒன்று பழயது. அது நம் முன்னோர்களிடமிருந்து வந்தது. மற்றொன்று புதியது. நாம் இப்போது செய்து கொண்டிருப்பது. இந்த வினைப் பதிவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். வினைப்பதிவுகளின் வாசனைகளால்தான் நமக்கு எண்ணங்கள் உற்பத்தி ஆகிறது. எண்ணத்திற்கு ஏற்ற செயல், செயலுக்கு ஏற்ற விளைவு, விளைவுக்கேற்ற புதிய வினை பதிவு. இது தொட்டால் தொடரும் சங்கிலி அமைப்பு கொண்டது. எனவேதான், நான் கவனித்த வகையில் சித்தர்கள் சின்ன சின்ன காரியங்களை மிக அக்கறையோடு நேர்த்தியாக செய்வார்கள். அவர்களை பொறுத்தவரை இயற்கை மீது அலட்சியம் காட்ட மாட்டார்கள். நல்ல காற்றும், நல்ல தண்ணீரும், பசுமையும் இருந்தால் அங்கு நிச்சயம் ஒரு சித்தர் தவம் செய்ய வருவார் என அந்த நல்லடியார் கூறுவார்.

அதனால்தான் நமது தமிழ் சித்தர்களால் நோயின் மூலம் அறிந்து மருந்து சொல்ல முடிந்தது. துன்பங்கள் வடிவெடுக்கும் முன்பே அவர்கள் அக்கறையோடு பார்த்து விடுவதால், கருணை என்ற உணர்வு அவர்களுக்குள் ஊற்றெடுக்கிறது. பின்பு கவனத்தோடு அணுகும் நுண்ணாற்றல் கிடைக்கிறது. மகிழ்போகம் பிறக்கிறது.

அதனால்தான் கவலை தோய்ந்த முகத்துடன் ஒருவன் பெரும் துன்பத்தை சுமந்து கொண்டு வரும்போது அவன் தற்செயலாக ஒரு சித்தரை சந்திக்க நேர்ந்தால் அவன் துன்பங்கள் காணாமல் போகிறது. ஏனெனில் அவர்கள் நேராக அவன் வினையின் மூலத்தை கண்டறிந்து, அக்கறையோடு அதனை தன் தவ பலத்தால் ஆழமாக கவனிக்கிறாரக்ள். ஏதும் பேசாமலேயே துன்பங்களை போக்கி விடுகிறார்கள்.

சாதரணமாக அக்கறை வந்துவிட்டாலே, எல்லாம் சரியாகிவிடும். சோம்பி திரிந்து தொப்பை வந்துவிட்டாதா திடிரென்று நமக்கு உடல் மீது அக்கறை வந்து விட்டால் வாக்கிங் செல்ல ஆரம்பித்து விடுவோம். நன்றாக யோசிப்போம். நாம் என்றைக்காவது அக்கறையோடு சுவாசித்து இருப்போமா? சித்தர்கள் ஒவ்வொரு சுவாசத்தையும் அக்கறையோடு சுவாசிப்பார்கள், ஒவ்வொரு மூச்சையும் கவனிப்பார்கள். அதானால்தான் அவர்களுக்கு எண்ணியது எண்ணியபடியே சித்தி ஆகிறது.

கல்வி மீது அக்கறை வைத்தால் அறிவு வசமாகும்.
அறிவு மீது அக்கறை வைத்தால் ஒழுக்கம் வசமாகும்.
ஒழுக்கம் மீது அக்கறை வைத்தால் அன்பு வசமாகும்.
அன்பு மீது அக்கறை வைத்தால் அறம் வசமாகும்.
அறம் மீது அக்கறை வைத்தால் துறவு வசமாகும்.
துறவு மீது அக்கறை வைத்தால் ஞானம் வசமாகும்.
ஞானம் மீது அக்கறை வைத்தால் யோகம் வசமாகும்.
யோகம் மீது அக்கறை வைத்தால் உடல் வசமாகும்.
உடல் மீது அக்கறை வைத்தால் உயிர் வசமாகும்.
உயிர் மீது அக்கறை வைத்தால் சீவன் வசமாகும்.
சீவன் மீது அக்கறை வைத்தால் சிவம் வசமாகும்.
சிவம் மீது அக்கறை வைத்தால் யாவும் வசமாகும்.

"பிறவாமற் போவதற்கு வழியே இல்லை
பிசகாத பூதமப்போ போகவில்லை
உறவாக்க பூதமைந்தும் நாட்கள் தோறும்
ஒழிந்தொழித்து போகுமொரு உண்மை கேளு
குறையான மலமதுதான் மிகுதியாச்சு
குறியான ஜனனந்தனில் ஜலமுமாச்சு
இறவாத விந்துவது தேய்வுமாச்சு
என் சொல்வேன் வாய்வுமடா கழியலாச்சே
ஆச்சுதென்ற மூச்சுமடா ஆகாயமாச்சு
அஞ்சடா தினம் தினமும் கழிவதாலே
காச்சுதென்ற தேகமது தளர்ந்து போச்சு
சாற்றுவேன் ஜீவாத்மா பரமாத்மா இவ்விரண்டும்
வாச்சுதென்ற சக்தி சிவமிருவராச்சு!
வல்லவரால்விருக்கோ சாவதில்லை
காத்து நின்ற பூதம் ஐந்தை வீணாய் கட்டி 
கையிலையை போலிருந்தார் பிண்டத்துள்ளே!"

இது மாமகரிஷி போகரின் ஜனன சாகர பாடல்.

அக்கறையோடு சுவாசித்தால் ... நிட்டை நிலை ... மகிழ்போகம் வாய்க்கும்!
அலட்சியமாக சுவாசித்தால் ... குறட்டை நிலை ... துயில்போகம் வாய்க்கும்!
மகிழ்போகமா? துயில் போகமா? செய்யும் செயல்களை அக்கறையோடு செய்வோம். கர்ம வினைகளை வடிவெடுக்கும் முன் கவனிப்போம்.