Sunday 8 March 2015

IN THE COMPANY OF PERFECT BEINGS PART 1

Chellappa Sairam has shared his friend Jai Ganesh's beautiful experience with Siddhas. 

மகிழ்போகம்.

தனக்கோ பிறர்க்கோ, மண்ணுயுர்க்கு விண்ணுயுர்க்கோ தீங்கு ஏற்படா வண்ணம் மகிழ்ச்சியை அனுபவிப்பதுதான் மகிழ்போகம். அப்படி ஒரு மகிழ்ச்சியை நமக்கு கற்று கொடுத்தவர்கள், கற்று கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். 

சித்தர்கள் என்றால் வெறும் சித்து செய்யும் அமானுஸ்ய மனிதர்கள் அல்ல. சித்தர்கள் என்றால் ஆங்கிலத்தில் perfect being  என்று கூறலாம். இயற்கைக்கு முரண்படாமல் மெய் எதுவோ அதனோடு என்றும் லயித்து அன்போடு வாழ்பவர்கள். வாழ்ந்து வழி காட்டும் நல்லடியார்கள். 

அப்படி என்னோடு வாழ்ந்து வழி காட்டிக் கொண்டிருக்கும் நல்லடியார்களைப் பற்றியும் அவர்களது உபதேசங்களையும், முகநூலில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

மகிழ்போக உபதேசம் 1 : 
“பிறர் செருப்பு; உன் காலை கடிக்கும்” 

அப்போது நான் சினிமா படங்களுக்கு dts sound check செய்யும் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆன்மிக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த எனக்கு ஒரு நண்பரின் மூலம் சதுரகிரி பற்றிய தகவல் கிடைத்தது. சித்தர் தேடலில் இருந்த எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது சதுரகிரி பயணம். முதல் சதுரகிரி பயணம். நாங்கள் மூச்சிரைக்க மலை ஏறி வந்து அப்பாடா என்று அங்கொரு திண்ணையில் உக்கார்ந்து இளைப்பார, இயற்கை எழில் கொஞ்சும் மகாலிங்க மலையில் நீல வேட்டி துண்டோடு ஒரு பெரிய உருவம் அமர்ந்து அங்கிருக்கும் மலை வாழ் மக்களை வேலை வாங்கிக் கொண்டிருந்து. ஆஜானு பாகுவான உடல் தேகம். பருத்த உடல். பார்த்தவுடன் ஈர்க்கும் கண்கள். மகாலிங்க மலையில் நான் கண்ட முதல் நல்லடியார். 

அவரிடம் ஒரு ஹேண்ட் பேக். அதில் ஒரு சைனா போன். அதில் நிர்வாணஷட்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. வாயில் பாக்கை போட்டு மென்று துப்பி எங்களை வரவேற்றார்.

"போய் ... சாப்பிடுங்க" என்று சொல்லி விட்டு "டோய் ... மண்ணாங்கட்டி",  என்று அங்கு உள்ள ஒரு மலைவாசியை அழைத்தார். அவன் எங்கள் உடமைகளை ஓர் அறையில் வைத்து விட்டு எங்களை சாப்பிட அழைத்து சென்றான். சாப்பிட உட்கார்ந்தோம். என்னால் நம்ப முடியவில்லை. அந்த மலையில் அப்படி ஒரு அன்னதானம். ருசி பிரமாதம். வயிறாற சாப்பிட்டு விட்டு அசதியாக அமர்ந்தோம். 

அவ்வடியாரிடம் என் நண்பர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது நான் "சித்தன்" என்ற இசை ஆல்பம் செய்து வைத்திருந்தேன். என் நண்பர் என்னை பற்றியும், என் ஆன்மிக ஈடுபாடு பற்றியும் அந்த அடியாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சித்த புருஷர்களோடு தொடர்புடைய அடியார்கள் பெரும்பாலும் நேரடி உபதேசம் செய்ய மாட்டார்கள். ஏனெனில் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என அறிந்துணர்ந்த நல்லடியார்கள் அவர்கள். முதல் பார்வையிலேயே என் ஆத்மாவில் ஊடுருவினார். அப்போது என் முதுகந்தண்டில் ஏதோ ஓர் புது உணர்வு. அப்படியே அந்த உணர்வில் என் மனம் லயித்து நின்று விட்டது. அவர் பேச பேச எனக்குள் மௌனத்தின் ஆனந்தம். கை கட்டி சரண்டர் ஆகி விட்டது என் கள்ள மனம். 

என் ஆன்மிக வாழ்வில் சில அற்புத அனுபவங்கள் நடந்தது உண்டு. சித்தர் போகரின் சமாதியில் நான் தியானம் செய்த போது, என்னை அறியாமல் நான் பாடல் எழுத ஆரம்பித்து விட்டேன். பாடல்களும் அதன் பொருளும் என்னையும் பிறரையும் ஆச்சர்யப்படுத்தியது. ஏனெனில் அப்போது என் வயது 18. அது மட்டுமல்லாமல் என் அறிவுக்கு அப்பாற்பட்ட தமிழாக அந்த பாடல்கள் இருந்தது. அதன் பின், எப்போதெல்லாம் போகரை நினைத்து தியானத்தில் அமர்ந்தாலும் எனக்கு பாடல் வர ஆரம்பித்தது. 

இது போன்ற அனுபவம் தங்களுக்கும் ஏற்பட்டுள்ளதா? இது ஏன் எனக்கு நடக்கிறது? சித்தர் போகருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? இது போன்ற கேள்விகள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்க என் மனதுக்குள் அவரது ஆன்மிக அனுபவத்தை பற்றி கேட்க வேண்டும் என்ற ஆவல் மீன் போல் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர் சட்டென கூறினார் "என் செருப்பு உன் காலை கடிக்கும்." நான் வியந்து போனேன். 

ஆம்! அதுதான் எனக்கு பதில். அதுதான் எனக்கு கிடைத்த முதல் உபதேசம். ஏனெனில், ஒரு போதும் பிறரது ஆன்மிக அனுபவம் நமக்கு உதவாது. இறைவனை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால் ஆன்மிக அனுபவங்களை செருப்பை போல் பாவிக்க வேண்டும். செருப்பை வாசலில் விட்டு விட்டு ஆலயத்திற்குள் செல்வது போல, அனுபவங்களையும் விட்டால்தான் இறைவனை தரிசிக்க முடியும் என்று என் மரமண்டைக்கு உணர்த்தினார். 

மகிழ்போக உபதேசம் 2 : 
மன கிளேசங்களை தூக்கி வீசு! தூங்காமல் தூங்கு!

சதுரகிரி பயணம் முடித்து வந்த எனக்கு உற்சாகம் தாங்க வில்லை. அந்த நல்லடியார் என் மனதில் குடி கொண்டு விட்டார். எப்போதும் அவர் ஞாபகம். அந்த பாக்கு மணம் தெய்வீகம் ஆகிவிட்டது. அந்த வாசணையை தேடி மீண்டும் போக வேண்டும் என்று என் மனம் கூத்தாடுகிறது. அவரிடம் பேச வேண்டும், நிறைய கேள்விகள் கேட்க வேண்டும், எனது ஆன்மிக விஷய ஞானங்களை எல்லாம் சொல்லி விட வேண்டும் என்றெல்லாம் எண்ண மேகங்கள் இங்கும் அங்கும் ஓடி திரிகின்றன. மகாலிங்க மலை போல் மனம் பசுமையாய் மாறி விட்டது. 

அந்த நல்லடியார் மெட்ராஸ் வந்திருப்பதாக நண்பர் மூலம் கேள்விப் பட்டேன். அவ்வளவுதான். எடுத்தேன் பேனாவை கிறுக்கி தள்ளினேன். அதில் வந்த மின்னல் வேக பாடல்கள் இவை. 
ஒரெழுத்தில் உரைந்திடுமாம் பிரம்ம ஞானம்
ஓதுவார்தம் உள்ளத்தில் ஓடும் நாதம்
நிட்டைநிலை சுத்தவெளி ஆடும் கோலம்
நிலை கொண்டால் சூக்குமத்தில் அம்பலமாகும்
பாரப்பா பரம்தனிலே சிந்தை ஊன்றி
பகட்டாமல் போகத்தில் யோகம் தோன்றி
தன்னுயிரை தான் உணர்ந்தால் தண்டம் ஆகும்
தற்பரத்தை தான் மறந்தால் பிண்டம் ஆகும்
இது போன்ற அர்த்தம் விளங்காத பாடல்களை எடுத்து கொண்டு அதற்கு விளக்கம் கேட்கவும் மேலும் சில எனது எழுத்து வடிவங்களையும் எடுத்து கொண்டு அவரை பார்க்க சென்று விட்டேன். அங்கு போனால் சூழ் நிலை வேறு மாதிரி இருந்தது. சதுரகிரியில் நன்றாக என்னோடு பேசிய அந்த நல்லடியார் இப்போது சுத்தமாக என்னைக் கண்டு கொள்ளவில்லை. நானும் கையில் நோட்டில் கிறுக்கிய பாடல்களுடன் காத்திருக்கிறேன். அவரோ ஊரில் யாரும் கண்டு கொள்ளாத சிவாலயம் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு குட முழக்கு செய்யும் வேலையில் இறங்கி விட்டார். சதுரகிரியில் அமர்ந்து லட்சகணக்கான சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் சேவையை சுறு சுறுப்பாக செய்த அவர் இங்கு வந்ததும் குட முழக்கு வேலையில் இறங்கி விட்டார். ஒருவர் மாற்றி ஒருவருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என விளக்கி கொண்டிருந்தார். குட முழக்கு செய்ய தேவைப்படும் நிதி உதவி சம்மந்தமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். என்னை சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.

நான் எழுதி வந்துள்ள சங்கதியை அவரிடம் சொன்னேன். சிரித்தார். பாக்கு பாக்கெட்டை கிழித்தார். வாயில் போட்டுக் கொண்டார். வாயில் அதை குதப்பியபடியே அந்த நோட்டை வாங்கினார். அவர் பையில் வைத்து கொண்டார். நாளைக்கு சொல்றேன் என்றார். அந்த கோவிலில் உள்ள புறாக்களை நோக்கி குடு குடுவென ஓடினார். அதற்கு உணவு அளிப்பவரோடு அளவளாவினார். நான் வெறுத்து போய் உட்கார்ந்து கொண்டேன். என்ன மாதிரியான பாடல்கள் இவை. இந்த மனிதன் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே. வாங்கி பார்த்தால்தான் என்ன? என்று மனதில் ஒரு கோபத்துடன் நானும் ஏதும் பேசாமல் "சாமி நான் கிளம்புறேன்" என்றேன். "அப்படியா சந்தோசம்" என்றார். மீண்டும் எனக்கு எரிச்சல். அவர் சிரித்தார். பதிலுக்கு நானும் பல்லை இழித்தேன். விர்ரென்று பைக்கை விரட்டினேன்.

அன்று இரவு முழுவதும் அந்த மனிதனின் நினைவு. இனி நமக்கு வரும் பாடல்களை அவரிடம் காட்ட கூடாது. என்று சபதம் வேறு போட்டுக் கொண்டேன். 

அடுத்த நாள் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு போன்கால். அது அவரேதான். அந்த நல்லடியாரேதான். அவர் குரல் கேட்டதும் திடிரென்று மனம் புத்துணர்ச்சி அடைந்தது. அவரை பார்க்க அந்த சிவாலயம் விரைந்தேன். 

அப்போது சொன்னார் "நாங்களே இருக்குற குப்பையை தூக்கி போட்டுட்டு இருக்கோம். உன்னோடதையும் படிச்சோம். எழுதி இருக்க விஷயம் என்னமோ அது உள்ளபடியே இருக்கட்டும். அதை எங்கிட்ட காட்டணும் ... காட்டணும்ன்னு ... துடிச்சுதுல்ல ... அந்த மன கிளேசத்தை முதல்ல நாம தூக்கி வீசுணும்! அப்பதான் தூங்காமா தூங்கலாம்!" என்று அவர் சொல்லி பாக்கு பாக்கெட்டை கிழித்தார். மீண்டும் பாக்கு மணம் பரவியது. என் மனம் அடங்கியது. கண்கள் மூடினேன். அவர் அவரது இயல்பான வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார். அவர் அருகில் ஏதும் பேசாமல் மோனமாய் அமர்ந்தேன். அந்த பாடல்களின் அர்த்தம் அப்போதுதான் விளங்கியது. தியானம் தானாய் சித்தி ஆனது. அந்த பாக்கு வாசணையில் எந்தன் சுவாசக் காற்று விருட்டென்று தொண்டை குழியின் உள் நாக்கு வாசலை கடந்து உச்சிக்கு சென்றது. அன்று ஆனந்தமாய் தூங்காமல் தூங்கி விட்டேன் அவர் பாத சுவடுகளில்.