Photos courtesy of Bala Chandran |
மகிழ்போக உபதேசம் 4:
"வாலைநாடி மாங்காப்பால் பதம் காண் பாம்பே
சேலைதேடி தேங்காப்பால் விடும் பதம் ஏனோ!"
ஒரு சில தினங்கள் என் வாழ் நாளில் மறக்க முடியாத தருணங்கள். அப்போது என் வயது 20. நசியனூர் சிவன் கோயிலில் என் நண்பன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். ஒரு தூணில் சாய்ந்து நான் கையில் நோட்டுடன் பாடலுக்காக காத்திருக்கிறேன்.
என் முன்னால் ஒருவன் வந்து நிற்கிறான். அவனை கண்டதுமே எனக்கு அப்படி ஒரு கோபம். சட்டென அங்கிருந்து எழுந்து சென்று விட்டேன். பின்பு அவன் அங்கிருந்து சென்றதும் மீண்டும் எனது பழைய தூணுக்கு வந்து விட்டேன். ஆழ்ந்த உறக்கம். என் நண்பன் தொடர்ந்து புன்னாக வராலி ராகத்தில் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான்.
அப்போது எனக்கு ஒரு பாடல் உதித்தது.
"பாண லிங்கமே! ஜோதி லிங்கமே!
படிக லிங்கமே! ஆகாச லிங்கமே!
ஏகனே உன் பெயரை ஏழையவன்
தானழைத்தால் ஓடி வந்து ஈந்தருள்வாய்!
வா! வா! வா!
இருளுக்குள்ளே ஒளிந்திருக்கும்
பேரொளியாய் நீ இருப்பாய் ...
இருளை நீக்கி அருளைத் தர
வா! வா! வா! வா!"
என நான் பாட என் நண்பன் புல்லாங்குழல் வாசிக்க சட்டென நாங்கள் எதிர் பாராத வேளையில் அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து நாகம் ஒன்று வெளிப்பட்டது.
நாங்கள் இருவரும் அசையவில்லை. அது அப்படியே எங்களை கடந்து கருவறைக்குள் சென்று அங்குள்ள ஒரு ஓட்டை வழியாக பாதாளத்திற்குள் சென்று விட்டது.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. மெல்லிய ஓசை கேட்கிறது. அது எனக்கு மட்டும்தான் கேட்கிறதா, அல்லது என் நண்பனுக்கும் கேட்கிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம். சட்டென அப்படி ஒரு மலர் வாசம். எங்களை கடந்து சில்லென்ற காற்று கடந்து செல்கிறது.
அப்போது எங்கள் இருவருக்கும் ஒரே சங்கதி கேட்டது "சங்கரன் கோயில் வந்து சேர்". இருவரும் ஒரே நேரத்தில் "உனக்கு இது கேட்டதா" என்று மாறி மாறி கேட்டுக் கொண்டோம்.
மறு நாள் காலை பஸ் ஏற காத்திருக்கிறோம். அப்போது என் நண்பன் குழப்பினான். டேய் எனக்கு மருதமலைக்கு போக வேண்டிய ஒரு வேலை வந்திருக்கு நான் வர முடியாதுன்னுட்டான். அவன் வரவில்லை என்றதும் எனக்கும் தனியாக போக பயம். பிறகு அறிவியல் ஆன்மிகம் எல்லாம் பேசி பேசி குழப்பி அந்த ஓசை கற்பனை என்ற முடிவுக்கு நாங்கள் வந்து விட்டோம்.
பிறகு நானும் அவனோடு மருதமலை போக முடிவு செய்து விட்டேன். நானோ "சரி நீ வேலையை முடித்து விட்டு வா, அதுவரை நான் மருதமலை முருகனை தரிசித்து விட்டு வருகிறேன்" என்று சொன்னேன். என் நண்பன் புல்லாங்குழல் இசைக்கலைஞன் மட்டுமல்ல கல்யாண போட்டோகிராபர்.
அவன் போய் விட்டான். நான் மருதமலையில் குரங்குகளோடு விளையாடிக் கொண்டு மெல்ல மலையேறிக் கொண்டிருந்தேன். அப்போது அதே சில்லென்ற காற்று, அதே மணம் என் வயிற்றில் அது புளியை கரைத்து விட்டது.
நடு வழியில் கீழே சென்று கழிவறையில் மலம் கழிக்க சோம்பேறிதனம். அதே சமயத்தில் வயிற்றை முட்டுகிறது மலம். மலம் கழிக்க மலையின் வேரொரு திசையில் சென்றேன். எங்கும் பக்தர்கள் எனக்கோ வெட்கம். வெட்டவெளியில் மலம் கழித்து பழக்கமில்லை. அதனால் மலையில் யாரும் செல்ல முடியாத ஒரு இடத்திற்கு சென்று அமர்ந்தேன். மலம் கழித்து விட்டு கையில் வைத்திருந்த குடிக்கும் தண்ணீரில் கழுவி விட்டு அப்பாடா என்று உட்கார நினைத்தேன். மூன்று கல் அங்கிருந்தது. அப்போது அதில் ஒரு கல்லில் அமர்ந்த மாத்திரத்தில் நெற்றி பொட்டு தெறிப்பது போல ஒரு வலி வ்யூவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று புருவ மத்தியில் பிடித்து இழுக்கிறது ஏதோ ஒன்று. என் மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள். அவ்வளவுதான் நான் சாகப்போகிறேன். கல்லூரிக்கு செல்வேனா? அம்மா ... அப்பா .... அண்ணன் .... கடன் .... அப்போதைய ஒருதலைகாதலி கீர்த்தனா ... கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர் அரியர் ... கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி ... நடிகை சௌந்தர்யா ... என என்னென்னமோ எண்ணங்கள் தாறு மாறாக வந்து போய் இறுதியில் மனம் நாசமடைந்து நினைவை இழந்துவிட்டேன் போல. அதன் பின் எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை.
சிறிது நேரம் கழித்து என் கால்கள் தானாய் நடந்து சென்று ஒரு சந்து நோக்கி சென்றது. அங்கே போய் அமர்ந்தேன். அவ்வளவுதான் ... கண்களை திறந்து பார்க்கிறேன் .... இருட்டி கிடக்கிறது. தட்டு தடுமாறி சந்தில் இருந்து புதருக்கு வெளியில் இருந்து இறங்கி வந்து பார்க்கிறேன் எதிரில் பாம்பாட்டி சித்தர் சன்னதி. கண்களில் ஆறாய் பெருகியது கண்ணீர்.
கன்று குட்டி தாய்ப்பசுவை தேடி ஓடுவதை போல நானும் ஓடுகிறேன் ... விழுகிறேன் .... காயம் ஆகிறது .... கண்டு கொள்ளாமல் படி இறங்கி ஐயனை கை கூப்பி வணங்கினேன். அப்போது அருகில் ஒரு வயதான வைத்தியர் என் தலையில் தொட்டு கூறினார் "வந்தவனுக்கு மாங்காப்பால் ... வராதவனுக்கு வெறும் தேங்காப்பால்தான்" என்று சொல்லி சிரித்து விட்டு போனார்.
அப்போது அருகில் மற்றொருவர் பேசிக் கொண்டிருக்கிறார் "பாம்பாட்டி சித்தர் சமாதி ... சங்கரன் கோயில்ங்க ... இங்க ஐயன் அடிக்கடி வந்து போவாருங்க .... மூணு கல்லு தாண்டி ஒரு சந்து இருக்குங்க ... அது வழியா மேல் மலை வழியா போய் இறங்கி அப்படியே முருகன் கருவறைக்குள்ள பூந்து வந்து வழிபாடு பண்றதா சொல்லுவாங்க ... எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாதுங்க".
"என் கண்களில் கண்ணீர் மல்கி நெஞ்சம் தழுதழுக்கிறது. என்னிடம் வார்த்தை இல்லை"