Tuesday, 7 February 2017

BHARATHI ON VAALAI

மங்கியற்தோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்

துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். 1

யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்;
யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள்.
‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ’ என்றேன்;
‘இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம்’ என்றாள்.
‘தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?’ என்றேன்
‘வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்.
விருப்புடனே பெய்குவது வேறாமோ?’ என்றாள். 2

‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?’ என்றேன்
‘காலமே மதியினுக்கோர் கருவியாம்’ என்றாள்.
‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’ என்றேன்;
‘நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்?’ என்றாள்
‘ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?’ என்றேன்.
‘எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’ என்றாள்.
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ?’ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.