Monday, 2 January 2017

SIDDHA TEACHINGS IN MALAYSIA

Jagathiswary Ravichandran has shared her research paper with Siddha Heartbeat.

1.1 முன்னுரை: 

ஜனன மரணத்தின் ஓயாத அழைப்பில் மனிதப் பிறவி அலைக்கழிக்கப்படுகிறது. வாழ்க்கைப் பொருள் குறித்து இன்னும் இறுதியான தெளிவு நம்மிடையே பதிவு செய்யப்படவில்லை. அறிந்த விடைகளைக் காட்டிலும் அறியாத திரை அதிகமாக மருட்டுகிறது. 

ஆதலில், இப்பிரபஞ்ச உண்மையினை அறிய உதவி செய்யும் பொருட்டு உலகினில் பல்வேறு சமயங்களும் நம்பிக்கைகளும் தோன்றியுள்ளன. அச்சமயங்களும் நம்பிக்கைகளும் பெரும்பாலும் அவற்றுக்குரிய வரையறுக்கப்பட்ட தெளிவான கொள்கையைக் கொண்டுள்ளன. 

இதற்கு இந்தியர்களின் சமயங்களும் நம்பிக்கைகளும் விதிவிழக்கில்லை. 

இந்தியத் தத்துவ கொள்கைகளை இரு வகைப்படுத்தலாம். ஒன்று ஆத்திகம்; பிறிதொன்று நாத்திகம். 

“வேதங்களில் நம்பிக்கை” என்னும் அளவுகோலைக் கொண்டே ஆத்திகம் நாத்திகம் என்னும் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேதங்களை ஒப்புக்கொள்கின்றவர் ஆத்திகர்; வேதங்களை ஏற்காமல் தங்களுடைய சிந்தனையால் கண்ட முடிவுகளை மட்டுமே ஏற்பவர்கள் நாத்திகர் (இராசேந்திரன், மு., சிவபாலன், கோவி., சில்லாழி,க., 2009, 35). 

மேலும், ஆத்திக நாத்திக கோட்பாடுகளில் அகப்படாத மூன்றாவது பிரிவினரும் உள்ளனர். 

இவர்கள் ஆத்திக நாத்திகக் கோட்பாடுகளில் எதையும் முழுமையாக ஏற்பதுமில்லை; மறுப்பதுமில்லை. கடவுள், அன்மா போன்ற நுண்பொருளைக் காட்சியாலோ அனுபவத்தை அடிப்படையாய்க் கொண்ட அனுமானத்தாலோ மெய்ப்பிக்க முடியுமா என்று இவர்கள் ஐயப்படுகின்றனர். இத்தகையோரை “ஐயுறவாளர்” என்று தத்துவ வரலாறு குறிப்பிடுகின்றது. 

ஆத்திகர் நாத்திகர் என்ற இரு பிரிவுக்கிடையே இந்த ஐயுறவாளர்கள் இடம் பெறுகின்றனர். 

தொடர்ந்து, இந்தியர்களின் சமயம் மற்றும் நம்பிக்கை வரலாற்றினை சற்று ஆளமாக பார்க்கையில் இவ்வரலாற்றினில் சித்தர்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றனர். ஏனைய இந்தியத் தத்துவங்களுக்கு வரையறுக்கப்பட்ட கொள்கைகளும் இலக்கணங்களும் அமைந்திருப்பதுபோல் சித்தர் கொள்கைக்கென வரையறுக்கப்பட்ட இலக்கணம் இதுநாள் வரை ஏற்படுத்தப் படவில்லை. சித்தர்களுக்குரிய இலக்கணங்களை நம்மால் வரையறுத்துக் காணமுடியாது போயினும் சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்கக் கூடிய பங்கும் பணியும் அளப்பரியதாக உள்ளதை உணரமுடிகிறது. 


1.2 சித்தர்கள்: 

சித்தர்களை பற்றி திரு.வி.கா., ‘சித்த மார்க்கம் என்னும் நூலில், சித்தர் என்பவர் சித்தி பெற்றவர்; சித்தை உடையவர் என்று கூறுகின்றார். ‘சித்தி’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து சித்தர் எனும் சொல் உருவாகியுள்ளது. சித்து என்னும் சொல்லுக்கு ‘அருள் விளையாட்டு’, இறைவனோடு ஆன்மா இரண்டறக் கலக்கும் அனுபவநிலை, இறைவனோடு நேரடித் தொடர்பு கொள்ளும் தன்மையை வலியுறுத்தும் ஒருவகை சமயம் எனக் கூறப்படுகின்றது. ‘சித்து’ என்னும் சொல் சித்தம் எனும் சொல்லோடு தொடர்பு உடையது. ‘சித்தி’ என்னும் சொல்லுக்கு ‘அடைதல்’ என்பதும் பொருளாகும். இதைக் ‘காரியம் சித்தியாச்சு’, ‘சொன்னது சித்தியாச்சு’ போன்ற பேச்சு வழக்காலும் அறியலாம். ‘சாயுச்சிய நிலை’ கைவரப் பெறுதலே ‘சித்தி’ எனப்படும். 'சித்தா’ என்று குறிப்பிடுகையில் தன்னைத் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் நிறை நிலை மாந்தர் என பொருள்படுகிறது. இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கள் மூலம் எண் பெருஞ் அட்டமா சித்திகளைப் பெற்றவரை சித்தர் என அழைக்கிறோம். 

சித்தர் இனம் நெடுங்காலமாக இந்த நிலத்தில் வேரூன்றி விழுது பரப்பி வருகிறது. சித்தர்கள் என்பவர்கள் உலகியலைத் துறந்தவர்கள். உலகியல் நடப்புக்கு மாறானவர்கள். சித்தர்கள் ஆடுவதில் வல்லவர்கள். சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள். அலைப்பாயும் சித்தத்தை வென்றவர்கள் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றனர்.

இவற்றுள் மன சலனங்களை வென்று, சித்தம் அடங்கி சீவனாக இருக்கும் சிவனை உணர்ந்து சிவமானவர்கள் என்னும் கருத்து சித்தர்களைப் பற்றிய மிகச் சரியான விளக்கமாகும். 

சிவமென்பது, முழுமையானது; செம்மையானது; அன்பு மயமானது; பெருங்கருணையுடையது என்றெல்லாம் விளக்கப்படுகின்றது. சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டுப்படுத்தியவர்கள். தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகத்து வாழும் உயிர்களும் பெற்றுய்ய வேண்டும் எனும் பெருநோக்கில் உயிர்களில் பக்குவ நிலைக்கேற்ப அவற்றைப் பிறவிதோறும் வழிநடத்தி பக்குவம் எய்தச் செய்கின்றனர். 

சித்தர்களின் காலமும் அவர்கள் மக்களுக்காகத் தந்த போதனைகளும் கால பொருள் போன்ற வரையறைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவையாம். அவர்களுக்கென கால வரை ஏதும் கிடையாது. சித்தர்கள் இயற்கையை கடந்த சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். 

சித்தர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகளும் வெளிப்பாடுகளும் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும், இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள். ஆதலால் தான், “பித்தந் தெளிந்தவன் பக்தன், சித்தந் தெளிந்தவன் சித்தன்” என்பர். "சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற ஓர் அறிஞர்களாகவும், மக்கள் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும்" சித்தர்கள் வாழ்ந்தனர். மேலும் மனித சமுதாயம் பண்பட்டு வாழ பல தத்துவங்களையும் கருத்துகளைச் விட்டுச்சென்றுள்ளனர். 


1.3 சித்தர் நம்பிக்கை: 

புவிமண்டலத்தை இயக்கும் ஆற்றல் படைத்தவர்களாய் நம்மிடையே வாழ்ந்த சித்தர்களின் அற்புத சித்திகள் அனைத்தும் பிரமன் ஊன்றிய அழியாத கற்பக வித்துக்களாகும். அவைகள் விருட்சமாகி விதையுமாகி யுகாந்திரச் சங்கிலியாகத் தொடர்வதற்குரிய வரங்களுமாகும். 

மேலும், இந்த ஜென்மாந்திர உறவு நம்மிடையே தொடரவில்லை என்றால் தர்மத்தின் வேர் எங்கோ பட்டுப்போய் விட்டிருக்கிறது என்றே அர்த்தம் என மக்கள் எண்ணத் தொடங்கினர். ஏனெனில், சித்தர் கண்ட பேருண்மைக்கான வெளிச்சத்தின் முன் இன்றைய அதி நவீன விஞ்ஞானம் மெய்யாக மருண்டு விழிக்கிறது. 

சந்ததமும் இளைமையோடு இருக்கலாம் 

மற்றொரு சரீரத்திலும் புகலாம் 

சலம் மேல் நடக்கலாம் 

கனல் மேல் இருக்கலாம் 

தன்னிகரில்லா சித்தி பெறலாம் 

என்ற ரகஸ்யத்தினை நன்கு அறிந்தவர்கள் சித்தர்கள். 

மன இருளைப் போக்கி ஞான ஒளி பரப்பி, தம்மை உயர்த்திக் கொண்டதோடு நில்லாது உலக மக்களையும் உயர்த்துவதற்கும் தவம் புரிந்த எண்ணற்ற சித்தர்களின் அற்புத சித்திகள் எனும் புதையல் ரகஸ்யத்தை மானுடர் ஒவ்வொருவரும் திறந்து பார்க்க வேண்டியது என மக்கள் எண்ணத் தொடங்கினர். இதுவே மக்கள் மத்தியில் சித்தர் நம்பிக்கை வேரூன்றி விருட்சமாகுவதற்கு அடிக்கல்லாய் அமைந்தது. இச்சித்த நம்பிக்கையானது இந்திய மண்ணோடு நின்றுவிடவில்லை. மாற்றாக உலகம் எங்கும் பறந்து சென்ற தமிழர்களுடனே இந்த சித்தர் நம்பிக்கையும் பறந்து சென்றது. இதற்கு மலேசிய மண்ணும் விதிவிழக்கல்ல. 


1.4 மலேசியாவில் தமிழர்கள்: 

மலேசியா பல்லின மக்களையும் பல்வேறு சமயங்களையும் கொண்ட நாடாகும். மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் ஏறக்குறைய 7.5 விழுக்காட்டினை (1.7மில்லியன்) வகிக்கின்றனர் மற்றும் இவர்களில் 80 விழுக்காட்டினர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் காலக்கட்டமான 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து அதிகமான இந்தியர்கள் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவ்வாறு புலம்பெயர்ந்த இந்தியர்களே இன்று மலேசிய இந்தியர்களாகக் கருதப்படுகின்றனர். 


1.5 மலேசிய தமிழர்களிடையே சித்தர் நம்பிக்கை: 

இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த காலம் முதல் இன்றுவரை மலேசிய இந்துக்களின் சமய நெறியையும், நம்பிக்கைகளையும் மற்றும் பண்டிகைகளையும் வளர்ப்பதில் ஆலயங்களும் சமய இயக்கங்களும் மிகப் பெரிய பங்கினையாற்றி வருகின்றன. 

இவர்களிடையே சைவ சித்தாந்த, வேதாந்த மற்றும் மரபுவழிச் சமய நம்பிக்கைகள் வேரூன்றி காணப்பட்டாலும் இந்து சமயத்தின் ஒரு பகுதியாக இருகின்ற சித்தர் நெறி ஆங்காங்கே தனி மனிதர்களாலும் குழுக்கள் மூலமாகவும் பரவத் தொடங்கியது. 

மலேசியாவில் சித்தர் நெறி 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியதாக அறியப் படுகின்றது. சித்தர் நெறி கால ஓட்டத்தில் வலுப்பெற்று இயக்கமாக உருவெடுத்தது. 


1.6 மலேசியாவில் சித்தர் சிந்தனையின் தொடக்கம்: 

புலம்பெயர்ந்து வந்த ஒரு சில இந்துக்கள் மத்தியில் சித்தர்கள் பற்றிய சிந்தனை இருந்து வந்துள்ளது என்று பல ஆய்வுகளின் வழி அறிய முடிகின்றது. சித்தர் நெறியை வாழ்க்கை நெறியாகக் கொண்டு ஞானத்தேடலில் ஈடுபட்டும் தவமியற்றியும் வாழ்ந்த ஒரு சில தனிமனிதர்கள் விடுதலைக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளனர் என்ற குறிப்பும் ஆய்வில் கிடைத்துள்ளது. 

அவ்வாறு சித்தர் நெறியில் நின்றவர்கள், பின்னாளில் மக்களால் குருமார்களாகவும், அடியவர்களாகவும், சுவாமிகளாகவும் போற்றப்பட்டு, மக்கள் மத்தியில் வாழ்ந்து, இறைநிலை அடைந்தார்கள் என சான்றுகள் தெரிவிக்கின்றன. 

சித்தர் நெறி சிந்தனை 70 ஆம் மற்றும் 80 ஆம் ஆண்டுக்காலக்கட்டங்களில் பல்வேறு வழிகளில் மக்கள் மத்தியில் பரவத்தொடங்கியது. இச்சிந்தனை பரவலின் காரணமாக ஆங்காங்கே சித்தர் இயக்கங்கள் தோற்றம் கண்டன. 

அவ்வகையில், சித்தர் இயக்கங்களும் முறையே பதிவுப்பெற்று சித்தர் நெறிக்கொள்கைகளை மக்களிடையே மேலோங்கச் செய்வதற்குப் பணியாற்றி வருகின்றன. 

அவற்றுள் மலேசிய ஸ்ரீ அகஸ்தியர் சன்மார்க்க குருகுலம், டெங்கில் ஸ்ரீ அகஸ்தியர் சன்மார்க்க சங்கம், ஸ்ரீ மலேசிய ஞானபீடம் மற்றும் ஸ்ரீ அகஸ்தியர் அருள் ஞானபீடம் ஆகியவை குறிப்பிடத்தகவை. 


1.7 மலேசியாவில் சித்தர் நம்பிக்கைக்கான காரணங்கள்: 

மலேசிய தமிழர்களுக்கு இடையே சித்தர் நம்பிக்கைகள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் அடி நாதமாக விளங்குகிறது. 

அக்காரணங்களானவை, 

மலேசியாவில் சித்தர் இயக்கங்கள், 

சித்தர் கலைகள், 

சித்த மருத்துவம், 

சித்த வைத்தியம், 

சித்த மூலிகை, 

சித்த நெறி மாநாடு, 

ஊடங்களில் சித்தர் நெறி, 

சித்தர் நெறியில் பெரியவர்கள், 

ஓலைச் சுவடியின் பங்கு, 

சித்தர் பற்றிய ஆய்வுகளும் நூல் வெளியீடும், 

தனிமனித முயற்சிகள் மற்றும் 

மலேசிய சித்த நெறியில் பிற இனத்தவர்கள் ஆகும். 


1.7.1 மலேசியாவில் சித்தர் இயக்கங்கள்: 

1980 ஆம் ஆண்டு மத்தியில் பரவ தொடங்கிய சித்தர் நெறி, சுவாமி தருமலிங்கம் என்பவரின் வழிக்காட்டலால் மெருகேறி வளர்ந்துள்ளது என்னும் செய்தி ஆய்வின் வழி தெரிய வருகின்றது. 

சுவாமி தருமலிங்கம் அவர்களுக்கு வழிக்காட்டியாக விளங்கியவர் துறையூர் ஓங்காரக்குடிலைச் சார்ந்த ரெங்கராஜ சுவாமிகளாவர். 

இவர் 1986 ஆம் ஆண்டு திரு. ரெங்கராஜ சுவாமிகளைச் சந்தித்தப் பின், குரு வழிப்பாட்டின் பெருமையையும், அகத்தியர் வழிப்பாட்டின் மகிமையையும் அறியப்பெற்றார். அதன் விளைவாக மலேசியாவில் சித்தர் நெறி தொடர்பான ஆன்மீக வகுப்புகள், சொற்பொழிவுகள், வழிப்பாடுகள் பெருகுவதற்கு வித்திட்டார். 

இவரைப் போன்று சித்தர் நெறியில் ஈர்ப்புண்ட ஒரு சிலர், இவரின் வழிக்காட்டுதலின் மூலமாக தமிழகத்தின் துரையூர் அமையப்பெற்றுள்ள ஓங்காரக்குடிலுக்குச் சென்றனர். மேலும், ரெங்கராஜ சுவாமிகளின் வழிக்காட்டுதலால் சித்தர் நெறியைப் பற்றி தெளிவுப் பெற்று குருவழிப்பாட்டின் தன்மையுணர்ந்து மலேசியாவிற்கு திருப்பினார்கள். 

அவ்வாறு பயிற்சிப்பெற்று வந்த ஒரு சிலர் இந்த நாட்டில் சித்தர் நெறி மென்மேலும் சிறந்து விளங்க சொற்பொழிவுகளையும் ஆன்மீக வகுப்புகளையும் நடத்தினர். 

சுவாமி தருமலிங்கம் தலைமையில் 1986 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிலாங்கூர் காஜாங்கில் அகத்தியர் சன்மார்க்க யோகா நிலையம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பிறகு, மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுலம் என்ற பெயரில் பத்துமலை (சிலாங்கூர் மாநிலம், கோலாலம்பூர் அருகே உள்ளது) என்ற தலத்தில் தனது நிலையத்தை அமைத்தார். 

இவரைப்போன்ற திரு. தமிழ்வாணன் தலைமையில், 1992 ஆம் ஆண்டு ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க நிலையம், டிங்கில் (கோலாலம்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. 

சன்மார்க்க குருகுல ஸ்தாபகர்களில் ஒருவரான அருட்செல்வர் அப்பன்னா நாகப்பன் அவர்கள் ஸ்ரீ அகத்தியர் ஞானபீடம் என்ற அமைப்பை 2004 இல் தனியே தொடங்கினார். 

மேலும், சிவராஜியோகி என்றழைக்கப்பட்ட திரு. ஆறுமுகம் என்பவரால் மலேசிய ஸ்ரீ அகத்தியர் ஞானபீடம் 1999 இல் கோலாலம்பூரில் தோற்றுவிக்கப்பட்டது. 

இவ்வியக்கங்களை தவிர்த்து, அகஸ்தியர் பதினென் சித்தர் யோகா சங்கம் (ஈப்போ), அகஸ்தியர் ஆலயம் பெட்டாலிங் ஜெயா, மலேசிய சித்தர் நெறி மையம் (கோலாலம்பூர்), கெமாயான் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் போன்ற பல்வேறு இயக்கங்கள் சித்தர் நெறியினை மலேசியாவில் பரப்பி வருகின்றன. 

இவற்றைத் தவிர்த்து, குருமார்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் மலேசிய பாபாஜி யோகா சங்கம், பரஞ்சோதி பரிபூரண ஞானசபை, மலேசிய சீர்டி சாய்பாபா இயக்கம், உலக சமாதான ஆலயம் போன்ற இயக்கங்கள் சித்தர்கள் பற்றி நேரடியாக போதிக்காவிட்டாலும், சித்தர்களை பற்றிய சிந்ததனைகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் பெரும்பங்காற்றி வருகின்றன. 


1.7.1.அ) சித்தர் நெறி இயக்கங்களின் நோக்கங்களும் கொள்கைகளும்: 

மலேசிய ஸ்ரீ அகஸ்தியர் சன்மார்க்க குருகுலம், டெங்கில் ஸ்ரீ அகஸ்தியர் சன்மார்க்க சங்கம், ஸ்ரீ மலேசிய அகஸ்தியர் ஞானபீடம் மற்றும் ஸ்ரீ அகஸ்தியர் அருள் ஞானபீடம் ஆகிய இயக்கங்களின் நோக்கங்களையும் கொள்கைகளையும் காண்போம். 

1. சித்தர்கள் பற்றிய சிந்தனையை மக்களுக்குத் தெளிவுப்படுத்துவது. 

2. குருவழிப்பாட்டினையும் தத்துவத்தினையும், குரு வழிப்பாட்டால் ஏற்படும் நன்மைகளையும், மற்றும் பலன்களையும் மக்களுக்கு தெளிவுப்படுத்துவது. 

3. ஆன்ம சுத்தி, அதன்வழி தவநிலை, தன்னிலை உணரும் மார்க்கம், ஆகியவற்றை மக்களுக்கு தெளிவுப்படுத்துவது. 

4. “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” (குறள் 137) என்ற குறளுக்கேற்ப தனிமனித ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்துவது. 

5. “தவஞ்செய்வார் தங்கமருஞ் செய்வார்மற் நல்லார் அவஞ்செய்வார் ஆசையுட்பட்டு” என்னும் குறளுக்கு ஏற்ப மனித பிறப்பின் நோக்கத்தினை அறிவதற்கு தவமியற்றி, பிறப்பின் இரகசியத்தை அறிந்து மரணமில்லா பெருவாழ்வு வாழ்வதற்கு வழிக்காட்டுவது. 

6. அன்பின் முக்கியத்துவம், அதன்வழி பெய்பொருள் உணர்தல், ஜீவகருண்ய ஒழுக்கம், அன்பே தெய்வம், அன்பே உயிர், அன்பே ஆசான், அன்பே தெய்வம், அன்பே அனைத்தும் என்ற மாபெரும் தத்துவத்தை மக்களுக்கு விளக்குவது. 

7. சரியை, கிரியை, யோகம், மற்றும் ஞானம் ஆகிய நால்வகை தத்துவத்தை விளக்கினாலும் அதிமுக்கியமாக யோக நெறியைப் பற்றி விளக்குவது. 

இவற்றின் நோக்கங்கள் அடிப்படையாக இருந்தாலும், இவ்வியக்கங்களின் தலைமைத்துவத்திற்கேற்பவும் மக்களின் மனப்போக்குக்கு ஏற்பவும், நாட்டின் சுழலுக்கு ஏற்பவும் இவ்வியக்கங்களின் நோக்கங்களில் மாற்றங்கள் காணப்ப்டுகின்றன. இவற்றில் சில முரண்பாடுகளும், ஒற்றுமைகளும் தென்பட்டாலும் அடிப்படையில் இவர்களின் நோக்கங்கள் ஒருமித்த இலக்கையே காட்டுகின்றன. 


1.7.1.ஆ) சித்தர் நெறி இயக்கங்களின் நடவடிக்கைகள்: 

இவ்வியக்கங்கள் பல்வேறு சித்தர் நெறி நடவடிக்கைகளையும் சமுதாய நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. பல்வேறு சமய நடவடிக்கைகள் இலவசமாகவும், குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் கட்டணம் விதிக்கப்பட்டும் நடத்தப்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பினருக்கும் பொருத்தமான நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வியக்கங்களின் நடவடிக்கைகள், குரு வழிபாடு, தியான வகுப்பு, யோகாசனப் பயிற்சி, சித்த வைத்தியம் பற்றிய கல்வி, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள், நல்லொழுக்கங்கள், மற்றும் ஊடகங்கள் ஆகும். 

குரு வழியாடு: 

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” (குறள் 350) 

என்ற குறளுக்கு ஏற்ப பற்றுதலை விடும் பொருட்டு பற்றற்றவர்களாகிய ஞானியர்களை வழிபடும் போக்கை இவ்வியக்கங்கள் மேற்கொள்கின்றன. 

தியான வகுப்பு: 

“தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் ” (சிவவாக்கியார்) 

என்ற கூற்றின்வழி வினைகளை வெல்வதற்கு தியானம் என்ற சிறந்த வழிமுறைகளை ஞானியர்கள் கையாண்டுள்ளதைக் குறிப்பிடுகின்றார். 

யோகாசனப் பயிற்சி: 

தவநிலை அனுபவத்திற்கும், தவநிலை உயர்வுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கும் யோகாசனப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 

சித்த வைத்தியம் பற்றிய கல்வி: 

சித்தர் நெறியின்படி “உடம்பார் அழியின் உயிரார் அழிவார்” எனும் சிந்தனைக்குகேற்ப உடலைப் பாதுகாத்து, அதனைக் காயற்கற்பமாக மாற்றுவதற்குச் சித்தர்கள் கூறிச் சென்ற வைத்திய முறைகள், உணவு முறைகள், சித்த வைத்திய வகுப்புகள், குறிப்புகள், ஆலோசனைகள், சொற்பொழிவுகள் மற்றும் மருத்துவ முறைகள் போதிக்கப்படுகின்றன. 

நல்லொழுக்கங்கள்: 

வாழ்வியல் கலையறிந்து, வாழும் வகைதெரிந்து வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திட சித்தர்கள் காட்டிய நல்லொழுக்க வழியினை இவ்வியக்கங்கள் போதிக்கின்றன. 

கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள்: 

இவ்வியக்கங்கள் கருத்தரங்கள், சொற்பொழிவுகள் ஆகியவற்றோடு தேசிய நிலையில் பல சித்த நெறி கருத்தரங்குகளையும் மற்றும் ஆய்வரங்குகளையும் நடத்துகின்றன. 

ஊடகங்கள்: 

மக்கள் புரிந்து பின்பற்றும் வண்ணம் அச்சு, தொலைக்காட்சி, வானொலி, மற்றும் இணையம் போன்ற மின்னூடகம் வழியாக இவ்வியக்கங்கள் கொண்டு சேர்க்கின்றன. 


1.7.2 சித்தர் கலைகள்: 

நம் தமிழ் மரபில் தோன்றிய சித்த பெருமக்கள் பேரருள் கொண்டு இறைவனிடம் வேண்டி, தங்கள் ஞானத்தால் கண்டறிந்த அருட் கலைகள் பல.

அவை யோகம், ஞானம், இரசவாதம், வைத்தியம், சோதிடம், மந்திரம், சரகலை, பஞ்சபட்சி, முப்பு, காயகற்பம், வர்மம் போன்ற அரிய கலைகளைத் தங்கள் சீடர்களும் மனித குலமும் பயன் பெரும் வகையில் “ஓலைச்சுவடிகளில்’ பாடலாக பல லட்சப் பாடல்களை வடித்தனர்.

அனைத்து கலைகளையும் மனிதன் கற்றுத் தேர்ந்தாலும், மலேசிய மண்ணில் குறிப்பிட்ட சில கலைகள் மற்றுமே பிரஸ்திப் பெற்றவையாகத் திகழ்கின்றன (சோமசுந்திரம், 1988, 76).

அவற்றுள் சோதிடக்கலை, வர்மக்கலை, யோகக்கலை போன்றவையாகும்.

தங்களின் வாழ்க்கை நிலையினை அறிந்துக் கொள்வதற்கும் மேலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் அவர்கள் சோதிடர்களையும் சித்த வைத்தியர்களையும் நாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். உதாரணத்திற்கு, மலேசியாவில் சித்த வைத்தியர் பாணி என்பவர் யோகக் கலை மற்றும் வர்மக்கலையைத் தன் மாணவர்களுக்குக் கற்று கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


1.7.3 சித்த மருத்துவம்: 

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். மலேசிய மக்களிடையே சித்தர் குறித்த முதல் அறிமுகத்தை சித்த வைத்தியத்தின் மூலம் அறிந்து கொண்டனர் எனலாம்.

சித்த மருத்துவ முறையானது மலேசியாவில் 77ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்க கூடும் என்பதான கருத்தும் நிலவுகின்றது. இதற்கு அடிப்படையாக கெடா மாநிலத்தில் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூஜாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள “புகிட் பது பஹாட்” எனும் இடத்தில் செய்யப்பட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சில கல்வங்கள் போன்ற அமைப்பிலான பொருட்கள் ஆதாரமாகின்றன. இருப்பினும் இவை சித்த வைத்தியத்திற்குப் பயன்படுத்தியவை என உறுதியாகக் கூறுவதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. 11-ஆம் நூற்றாண்டில் இராஜேந்திரசோழன் கடாரத்தின் மேல் படையெடுத்து வந்த போது சித்த மருத்துவர்களும் உடன் வந்திருக்கக்கூடும் என்ற கருத்தும் நிரூபிக்கப்படாத அனுமானமாகும். 

1870-களில் உத்தண்டி என்பவரின் மகனான, பெரிய தம்பி எனும் சித்த வைத்தியர் தமது 27 வயதில் மலேசியாவில் சித்த மருத்துவச் சேவையைச் செய்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. இவர் கும்பகோணம் தஞ்சை அரண்மனை வைத்தியராகிய அண்ணாசாமியின் பேரன். தமது 5 வயதில் மலாயாவிற்கு வந்த இவர் சிவராஜ யோகி பரம்பரை வைத்தியர் என அடையாளம் காட்டப்படுகிறார். அக்காலக்கட்டத்தில் இவரிடம் ஐம்பது சீடர்கள் சித்த மருத்துவம் பயின்றுள்ளனர். இவர் வட்டார மக்களுக்குச் சித்த வைத்தியம் வேனின் மூலமாக செய்துள்ளார். அவர் 1943இல் தமது 95 வயதில் காலமானார். பெரிய தம்பியின் சீடர்களில் மிக முக்கியமானவர் இவரின் மகனாகிய கணபதி அவர்கள். இவர் மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் இரவாங் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1986-இல் ஜீவசமாதி அடைந்தார். இன்றும் இவர்தம் வழியினர் குரு வழிபாடு செய்கின்றனர். இவர் தமது மாமனாரின் மருத்துவப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கட்டிக் காத்து வந்தார். பெட்டாலிங் ஜெயா பழைய நகரில் இன்றும் இவரது வைத்தியக்குடில் இயங்கி வருகிறது. 

பெரிய தம்பி காலத்திலேயே மேலும் சிலர் சித்த வைத்தியத்தை மலேசியாவில் முறையாக மேற்கொண்டிருந்தாக அறியப்படுகிறது. ஆனால், அவர்களைக் குறித்த பிற தகவல்கள் இன்றும் கிடைக்கவில்லை. இதன் வழி, பெரிய தம்பி மட்டுமல்லாது மேலும் சிலரும் இந்தத் துறையில் பங்களித்துள்ளனர் என்பது அறிய முடிகிறது.

தொடர்ந்து, தமிழ் நாடு, பழனி, R.M.K. வேலுசாமி சித்த வைத்திய சாலை 1960-இல் முறையாக தங்களது நிறுவன முகவர்களை கோலாலம்பூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் நியமனம் செய்து தங்களது சித்த வைத்திய மருந்துகளை மலேசியாவில் விநியோகம் செய்திருப்பதாகத் தெரிகின்றது. இதற்கு முன்பே இந்நிறுவனத்தின் பொருள்கள் மலேசிய நாட்டுக்கு அறிமுகமாகி இருந்ததும் தரவுகளின் மூலம் அறிய முடிகின்றது. இதை தவிர, தனிமனிதர்கள் சிலரும் தோட்டப்புறங்களில் தங்களுக்குத் தெரிந்த சித்த வைத்திய மருந்துகளைத் தயாரித்து தந்திருக்கின்றனர். 

சித்த மருத்துவ குறிப்புகளை மலேசிய சித்தர்களிடம் மக்கள் பெறுவதன் வழி, அவர்களிடம் சித்தர் பற்றிய சிந்தனையும் நம்பிக்கையும் ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு சித்த வைத்தியர் பாணி. அவர் ஒருவரின் நாடி பிடித்து பார்த்து, அவரின் உடலில் இருக்கக் கூடிய நோய்களைக் கண்டறிந்து விடுவார். பின்னர், நோய் குணமாக சித்த மருத்துவ மூலிகைகளைக் கொடுப்பார். ஆகவே, இவரை மக்கள் நாடிச் செல்வதன் வழி, மலேசியத் தமிழர்களிடையே சித்தர் நம்பிக்கை உள்ளது என்பதை உறுதிப் படுத்தலாம். 


1.7.4 சித்த வைத்தியம்: 

அனைவராலும் அன்போடு வைத்தியர் பாட்டி என அழைக்கப்படும் சித்த வைத்தியர் பாக்கியம் மலேசியாவின் மிக திறமையான சித்த வைத்தியர் ஆவார். பலராலும் கைவிடப்பட்ட பல நோயாளிகளைக் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. ஆனால் தன் பெருமை கருதாமல் எல்லாம் முனிவர் செயல் என சொல்லும் முனிவர் பக்தை இவர். அழிந்துப் போகும் நிலையிலுள்ள பல மூலிகையைக் காப்பாற்றி வளர்த்து வருகிறார். வெண்நாவல் முதற்கொண்டு முப்பிரண்டை முதல் பல மூலிகைகள் இவர் வசம் உள்ளன. சித்த வைத்திய உலகில் மிகச் சிறந்தவராக திகழும் இவர், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஓலை சுவடி கையெழுத்து பிரதி, மற்றும் கிடைப்பதற்கு அறிய புத்தகங்கள் பல வைத்துள்ளார். முதன் முதலில் சித்த வைத்திய பட்டப்படிப்பு முறையை அறிமுகப்படித்தியவர் இவரே. 


1.7.5 சித்த மூலிகை: 

சித்தர்களது மருத்துவ முறை சித்த மருத்துவத் துறையைத் தனித்து வளர்த்துள்ளது. அவர்கள் இயற்கைச் செல்வமாகிய மரம், செடி, கொடி, இவற்றின் வேர், பட்டை, இலை, பூ, காய், கனி, கொட்டை, முதலியவற்றையும் உலோக வகைகள், இரச் வகைகள் முதலியவற்றையும் பயன்படுத்தி நோய் தீர்க்கும் கலையை சித்தர்கள் நன்கறிந்தார்கள். மரம், செடி, கொடி, ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் விதைகள், பூக்கள், இலைகள், கீரைகள், காய்கள், கனிகள், பயறுகள், தானியங்கள், தண்டுகள், கிழங்குகள், மசாலைகள் போன்றவையே சித்தர்கள் நமக்கு காட்டியுள்ள மூலிகை உணவுகளாகும். சித்தர் நம்பிக்கையை கொண்ட மக்கள், பசியின்மை, இருமல், சலி, தலைவழி போன்ற பிரச்சணைகளுக்கு சித்தர்கள் கையாண்ட மூலிகைகளையே பயன்படுத்துகின்றனர். 


1.7.6 சித்த நெறி மாநாடு: 

உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கும் திருவிழா தான் ‘சித்தர்கள் மாநாடு’. சித்தர் நெறி மாநாடு தொடங்கியதே மலேசியாவில் தான். மேலும், மூன்றாவது உலக சித்தர் நெறி மாநாடு மலேசியாவில்தான் செம்மையுற நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 2007 உலகச் சித்தர்நெறி மாநாடு, மலேசியாவில் கோலாம்பூரில்; சித்தர்கள், சித்தர் பாடல்கள், தத்துவம், மருத்துவம் போன்ற தலைப்புகளைப் பற்றி ஆராய்வதற்காக நடைபெற்ற மாநாடு ஆகும். 

2011 உலக சித்தர்நெறி மாநாடு தமிழ்நாட்டில் மதுரை நகரத்தில் மே 21, 22 திகதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டை உலக சித்தர் ஆராய்ச்சி மையமும் பவானி சக்தி நிலைச் சங்கமும் பொறுப்பேற்று நடத்தினர். இந்த மாநாட்டில் கருபொருள் "ஒளிமயமான வாழ்வுக்கு சித்தர்கள் உணர்த்திய நெறிகள்" என்பதாகும். மேலும் "இந்த மாநாட்டில் சித்தர்களின் தத்துவங்கள், போதனைகள், கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இளைய தலைமுறைக்கு உணரச் செய்தல், நெறிகளைப் பின்பற்றி நல்வாழ்வு வாழ்தல் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

நான்காம் உலக சித்தர் மாநாடு, மே மாதம், 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது. இம்மாநாடு சிறப்புற நடைப்பெற பலர் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடையை வாரி வழங்கினர். மேலும், மாநாட்டின் போது சித்தர் நெறி தன்னார்வாளர்கள், மாநாட்டிற்கு வந்திருந்த சிறப்புப் பிரமுகர்களுக்கும் பேராளர்களுக்கும் போக்குவரத்து வசதிகளை இலவசமாகச் செய்து தந்தனர். மேலும் பேராளர்களும் கட்டுரையாளர்களும் மாநாட்டின் போது தங்குவதற்கு மலாயாப் பல்கலைகழகத்தின் இரண்டாம் தங்கும் விடுதியில் இடமளித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தனர். மலாயாப் பல்கலைகழக இந்து சங்க மாணவர்களும் இம்மாநாடு சிறப்பாக நடைபெற எல்லா வகையிலும் முன்னின்று ஒத்துழைப்பு வழங்கினர். இவை மலேசிய மக்களிடையே சித்தர்கள் குறித்த வழிப்புணர்விற்கு மேலும் வளு சேர்த்தது என்றால் அது மிகையாகாது. 


1.7.7 ஊடங்களில் சித்தர் நெறி: 

1950-களுக்குப் பிறகு, எடுத்த தமிழ் திரைப்படங்களில் சித்தர்கள் குறித்த சிந்தனை மக்களிடையே ஏற்பட்டது. இராமாயணத்தையும் மகாபாரத கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் வசிஷ்டர், அகத்தியர், விசுவாமித்திரர், ரிஷ்யசிருங்கர், கலைக்கோட்டு முனிவர் வியாசர் போன்றோரின் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பின்னர் எடுக்கப்பட்ட அகத்தியர், பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற திரைப்படங்கள் முழுமையாகச் சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படங்களாகும். இதன் அடிப்படையில் சித்தர்கள் குறித்த தகவல்கள் மக்களிடையே சற்று வேரூன்றத் தொடங்கியது எனலாம். விழுதுகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் சித்த வைத்தியம் என்ற பகுதியில் வைத்தியர் பாணி வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான சித்த மருத்தவ குறிப்புகளை கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 14-ஆம் திகதி டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு கண்ணாடி எனும் வானவில் நிகழ்ச்சியில் அகத்திய சண்மார்க்கமானது அடிப்படை வசதிகளை இழந்த ராமு அம்மா குடும்பத்திற்கு செய்யும் உதவிகளையும் ஒளிப்பரப்பியது. 

வானொலிகளில் ஒளிபரப்பப்பட்ட பாட்டி வைத்தியம் எனும் நிகழ்வும் மக்களிடையே சித்தர் பற்றிய சிந்தனையைப் பெற உதவியாய் இருந்தது.

மேலும், அபூர்வாஸ் நிகழ்ச்சிகளும் சித்த நெறியின் வளர்ச்சிக்கு உதவின.

சிவமயம், சிதம்பர ரகசியம், ருத்ரம் போன்ற சித்தர் நெறியை மையமாகக் கொண்ட தமிழகத் தொலைக்காட்சி தொடர்கள் மலேசிய தமிழர்களிடையே சித்தர் நம்பிக்கையை மேலும் வலுப்பெறச் செய்தது.

இக்காலத்தில் முகநூல், இணையம் போன்ற சமூக வலைப்பக்கங்கள் வளர்ந்து விட்டன. சித்தர் அறிவியல், சித்தர் பாடல்கள், தமிழும் சித்தர்களும் போன்ற முகநூல் பக்கங்கள் சித்தர்களைப் பற்றிய பல அரிய தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. ஆகையால், இதன் வாயிலாகவும் மக்கள் சித்தர் நெறியை அறிந்துக் கொள்கின்றனர். 


1.7.8 சித்தர் நெறியில் பெரியவர்கள்: 

அக்காலத்திலேயே சித்தர் குறித்த சில தகவல்கள் மலேசிய மக்களிடையே மறைமுகமாகச் சேர்ந்துள்ளன எனலாம். இதற்கு சான்றாக அக்காலத்தில் மலேசியாவில் வாழ்ந்த யோகியர்களும் துறவியர்களும் ஆவர். எடுத்துக்காட்டாக, பேராக் மாநிலத்தில் தாப்பா என்ற இடத்தில் ஜெகந்நாத சுவாமி, அங்கேயே வாழ்ந்து பின்னர் அங்கேயே மகாசமாதி கொண்டார். இவர் சித்தர் நெறி பற்றியத் தகவல்களை மக்களிடையே கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கால மக்களிடையே, இன்னும் பல பெரியோர்கள் ஆங்காங்கே தோன்றி சித்தர் நெறி குறித்த போதனைகளைப் பரப்பியுள்ளனர் என்பது வெளிப்படுகின்றது. 


1.7.9 ஓலைச் சுவடியின் பங்கு: 

ஓலைச் சுவடிகள் மக்களிடையே சித்தர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்கு பெரும் பங்காற்றியுள்ளன. 70-களில் மக்களிடையே ஓலைச்சுவடி பார்க்கும் போக்கு வளர்ந்து 80-களில் வலுப்பெற்றது. ஓலைச்சுவடிகளின் வழி, சித்தர்கள் மக்களின் சிக்கல்களை நேரடியாக வந்து தீர்ப்பது போன்ற உணர்வார்ந்த உண்மையால் சித்தர் நெறி மக்களின் மனங்களைக் கவர்ந்தன எனலாம். பல சித்தர் இயக்கங்கள் இத்தகைய சேவையை வழங்கி மக்கள் பரிகாரங்களைச் செய்வதற்கு உதவியிருக்கிறது எனலாம். இதன்வழி, தங்களின் சித்தர் இயக்கங்களிலும் சங்கங்களிலும் அவர்களை உறுப்பினர்களாக்கிக் கொண்டு சித்தர் போதனைகளை அவர்களுக்கு வழங்கினர். இவ்வாறே சித்தர் நெறி பிரபலமடைவதற்கு ஓலைச் சுவடிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. 


1.7.10 சித்தர் பற்றிய ஆய்வுகளும் நூல் வெளியீடும்: 

அ) சித்தர் பற்றிய ஆய்வுகள். 

முனைவர் இரா. தண்டாயுதம். 1985. இந்திய ஆய்விதழ் (தொகுதி 3): சிவஞானமுனிவர் வாழ்வும் நூல்களும். இந்திய ஆய்வியல் துறை. மலாயாப் பல்கலைக்கழகம். 

கோவி. சிவபாலன். 2006. இந்திய ஆய்விதழ் (தொகுதி 9): சித்தர் பாடல்களில் காணப்படும் ஆன்ம ஈடேற்றத்திற்கான தடைகளும் அவற்றைக் களைவதற்குரிய வழிகளும். இந்திய ஆய்வியல் துறை. மலாயாப் பல்கலைக்கழகம். 

G. SIVAPALAN. 2006. THE SIDDHA WORSHIP IN MALAYSIA: AN INTRODUCTION. THE PAPER PRESENTED IN THE 22ND ALL INDIA SOCIOLOGICAL CONFERENCE. CHENNAI. 

கோவி. சிவபாலன். 2012. நடைமுறை வாழ்க்கைக்குச் சித்தர்கள் காட்டும் செந்நெறி. ஐந்தாவது உலக சித்தர் நெறி மாநாடு. ஜொகூர். மலேசியா. 

‘பாட்டி வைத்தியம்’ சித்த மருத்துவர் ‘குணா’. 2012. பஞ்ச பூத சாஸ்திரங்கள். ஐந்தாவது உலக சித்தர் நெறி மாநாடு. ஜொகூர். மலேசியா. 

திரு. மணிமாறன். மலேசியாவில் சித்தர் இயக்கம்: ஓர் ஆய்வு. இந்திய ஆய்வியல் துறையின் ஆய்வேடு. 


ஆ) சித்தர் பற்றிய நூல்கள். 

பல மாநாடுகளின் ஆய்விதழ்கள் 

மெய்ஞானக் களஞ்சியம் - உயிரே கடவுள் 

சித்தர்கள் வாழ்வும் வாக்கும். 
பேராசிரியர். முனைவர். இராசேந்திரன் 
திரு. கோவி. சிவபாலன் 
திரு. சில்லாழி 

1.7.11 தனிமனித முயற்சி: 

ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு சமுதாயத்தின் பிரதிபளிப்பக உள்ளான். ஆதலால், தனிமனிதன் தானாக முன்வந்து மின்வைக்கும் ஒவ்வொரு காரியங்களும் ஒரு சமுதாயத்தையே மாற்றி படைக்கும் வள்ளமை பெற்றவையாகவே உள்ளன. அவ்வகையிலேயே, மலேசிய திருநாட்டில் தமிழர்களிடையே சித்தர் நம்பிக்கை வளர்வதற்கும் தனி மனிதனின் பங்கானது அளப்பரியதே. சித்தர்களின் கொள்கையில்  ஆர்வமுள்ள மனிதர்கள் சித்தர்களின் நெறியினைப் பின்பற்ற தொடங்குகின்றனர். மேலும், சித்த நெறியினை பின்பற்றி பயன்பெரும் ஒவ்வொரு மனிதர்களும் அவ்வழியிலேயே செல்லுகின்றனர். இவர்களே சித்தர்களை தங்களது மானசீக குருவாக ஏற்று அச்சித்தர்கள் காட்டிய தர்மத்தின் வழியே சென்று பலரின் வாழ்வில் விளக்கேற்றிவைக்கின்றனர். இத்தனி மனிதர்கள் தங்கள் செல்ல விரும்பும் இந்த அறப்பாதையே தனியாக அனுபவித்து பயன்பெறாது தன்னைச் சுற்றுயுள்ள குடும்ப மற்றும் நட்பு வட்டாரத்திற்க்கும் கற்றுத் தந்து கூட்டு நன்மைகளை பெறுகின்றனர். 

மேலும், இத்தனி மனிதர்கள் சித்தர்களுக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம் சித்தர்களுக்கு உகந்த நாளாகிய பௌர்ணமி, வியாழன் கிழமைகளில் பூஜைகளை செய்து நன்மைப் பெறுகின்றனர். அதோடு மட்டும் நின்றுவிடாது, உதவிகளை நாடி நிற்கும் பல உயிரின்ங்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை இடைவிடாது செய்தவண்ணமே உள்ளனர்.

தனிமனித முயற்சி என்று பார்கையில் பாலச்சந்திரன் மற்றும் சண்முகம் எனும் சிறந்த மனிதர்கள் குறிப்பிட தக்கவர்களாவே உள்ளனர். இவர்கள் தனி மனித முயற்சியாக இச்சித்த கொள்கைகளைக் கையாளத்தொடங்கினர். பின்னர் அகத்திய சண்மார்க்க சங்க உறுப்பினர்களாகினர். பின்னர், தங்களது குடும்ப உறுப்பினர்களையும் மற்றும் நண்பர்களையும் தங்களது முயற்சியில் ஈடுப்படுத்தி பல நற்காரியங்களை செய்தே வருகின்றனர்.

சண்முகம் அவர்கள் சித்தர்களைக் குறித்தும் சித்த வழிப்பாடு குறித்தும் மக்கள் அறிந்துக்கொள்ள வளைத்தளங்களில் பல கட்டுரைகளை எழுதிய வண்ணம் உள்ளார். 

மேலும், இவர், அகத்தியர்கான பூஜைகளை கூட்டுப்பிராத்தனையாக செய்து வருகிறார். பாலச் சந்திரன் அவர்கள் ‘தொண்டு செய்வோம்’ என்ற ஒரு சங்கத்தினை உருவாக்கி பல ஏழை எளியோர்களுக்கு உதவி வருகின்றார். “தர்மத்தின் வழி செல்ல கர்மத்தின் வலி குறையும்” என்ற ஒன்றே இவர்களது தாரகை மந்திரமாகுமே தவிர மற்ற எந்த ஒரு பலனையும் எதிர்பாராது செயல்பட்டு வருக்ன்றனர் என்றால் அது மறுக்கவியலாத உண்மையே. 


1.7.12 மலேசிய சித்த நெறியில் பிற இனத்தவர்கள்: 

மலேசியாவில் சீன இனத்தவர்கள் சித்தர் நெறியில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். குறிப்பாக, தியானத்திலும் யோகக்கலையிலும் அவர்கள் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, ‘THE ART OF LIVING’ ஏற்பாட்டில் 29.3.2012 இல் ‘PUTRA WORLD TRADE CENTRE இல் ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் சொற்பொழி ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட 25000 வருகையாளர்களில் 95 விழுக்காட்டினர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


1.8 முடிவுரை: 

இறவா இன்பநெறி மிகுந்த வாழ்வு எய்த விழைந்த அனைத்து சித்தர்களும் இப்பூவுலகின் அருளாளர்களாக எண்ணற்கரிய கொடையினை ஈந்துள்ளனர். உடல், உயிர், உலகம் இயற்கை இவைகளின் இயல்புகளையும் அனைத்து சிருஷ்டி ரகஸ்யங்களையும் அற உணர்ந்து அவைகளில் உள்ளகுறை நீக்கி, குணம் நாடி இறை ஆனந்த நிலையை தன் வயமாக்கி மரணம் வென்று சதா சர்வ காலமும் மனதோடு சிவம் ஒன்றி வாழ்ந்தனர் இந்த சித்தர்கள்.

பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிமாற்றங்களை ஜென்மாந்திர ஞான வாசத்தின் காரணமாய் அறியும் ஆற்றலினைப் பெற்றவர்கள்ள இவர்கள்.

அநாதிகாலம் தொட்டே தமது வாழ்வை தொடங்கிய சித்தர்கள் கல்பம் உண்டு காயசித்தி பெற்று ஞானப்பரண் ஏறி ஞால முழுவதும் வலம் வந்து பல அரிய நற்பணிகளை மக்களுக்காக செய்தனர்; விட்டுச் சென்றனர்.

காலத்தால் தொன்மை வாய்ந்த சித்தர் நெறி இக்காலத்தில் மலேசிய மக்களிடையே புகழ் பெறத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

சித்தர்களின் பெயர்களில் தோன்றியிருக்கும் இயக்கங்களும், அவர்களில் பெயர்களில் நடைப்பெறும் நற்பணிகளும், மலேசியாவில் நடந்த முதலாவது சித்தர் நெறி மாநாடும், மேலை நாடுகளில் பிரபலமாகி வரும் யோகாசனங்களும், ஓலைச் சுவடிகளில் தங்களின் துன்பங்களுக்கு நிவாரணம் தேடும் போக்கும் இவற்றிற்கு ஆதாரமாக விளங்குகின்றன.

இது தொடக்க நிலையே. இன்னமும் சித்தர்களின் உயரிய நெறியை நிறைவாக மக்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. மேலும், மலேசியாவில் விவரம் தெரிந்த பலரும் வெளிப்படாமல் இருக்கின்றனர் என்பதுவும் ஏற்கக் கூடிய செய்திதான். இதற்கு சுப்பிரமணியர் ஞானம் 500 இல் கூறியதைப் போல பூர்வ ஜென்ம வாசம் வேண்டும் என எண்ணத் தோன்றுகின்றது. ஆனால், இந்த தொடக்கம் வளர்ந்து விரிந்து எதிர்காலத்தில் மக்களிடையே பரவி வளரும் என்பது திண்ணம்.