Monday 25 March 2024

A READER'S JOURNEY

A reader and follower of Siddha Heartbeat has shared his journey, experience, and understanding while traveling the path of the Siddhas.

சித்தப் பயணம் இரு வகை.

2014 இல் தொடங்கிய பயணம் இது. தற்போது வயது 34 காக இருந்தாலும் சித்தர்களோடு பயணத்தில் நான் இன்னும் பத்து வயது மாணவனே.

இந்த பயணங்களில் பல ஜாம்பவான்கள் இருக்கையில் நான் என்னுடைய பயண மாற்றங்களையும், அதிலிருந்து நான் கற்றவற்றையும் விட்டவற்றையும் பகிர்வதால் ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்தருள வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சரியையில் தெய்வத் தொண்டினை நாமே நம் கைப்பட செய்யச் சொன்னார் அகத்தியர் அப்பா. ஹோமம், அவருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய் வேத்தியம் மற்றும் தீபாராதனை என ஆலய வழிபாட்டினை நடுவராக ஒரு ஆகமம் முறை வந்த குருக்கள் இல்லாது நானே என் கைப்பட செய்ய ஊக்குவித்தார்.

இதில் எனக்கு கற்றுத் தந்த பாடம் சித்தர்களோடு இணைவதற்கு நமது உள்ள தூய்மைமட்டும் போதும் என்று. சித்தர்களோடு இணைந்து விடுகிறோம். சித்தர்களும் நம்மோடு உலவத் தொடங்கிவிடுகிறார்கள். எதற்கு? நாம் அவர்கள் வசம் இருக்கும் அவர்கள் நம்மைக் கண்காணிப்பர்.

கிரியையில் சக மனிதர்களுக்கு உதவிக் கரம் நீட்டக் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், வீதியில் வசிப்பவர், பிறகு குடும்பமாக வசித்தாலும் வருமான பற்றாக்குறையால் வாடுவோர் என எல்லா தரப்பு மக்களையும் நேரே கண்டு பசி ஆற்றும் பாக்கியத்தைச் அளித்தார்.

இதில் எனக்கு கற்றுத் தந்த பாடம் எனது வாழ்க்கையில் ஒரு போதும் குறை கூறும் அளவுக்கு உடலாலோ, மனதாலோ, சிந்திக்கும் ஆற்றலில் எவ்வித குறைபாடுகளும் தரவில்லையே. பிறகு எதற்கு வாழக்கூடிய வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டே வாழவேண்டும் என்று தான்.

சரியையும் கிரியையும் சித்தர்களோடு நமக்கும் உள்ள உறவினை வலுப்படுத்தவும், கர்ம வினைகளை போக்கவும், சிந்தனையை நெறிப்படுத்தவும், இருப்பதைக் கொண்டு நடப்பவற்றை அற்புதமாக மகிழ்ச்சியாகப் பார்க்கப் பழகிக் கொள்வதற்குத் தரப்பட்டவை. இதை நான் அரிந்து உணர்ந்துகொண்டு செயலாக்கம் செய்வதற்கு அகத்தியர் அப்பாவும் மற்ற சித்தர்களும் எடுத்துக்கொண்ட அவகாசம் 5 வருட காலம். 

உணர்ந்த பிறகு அதை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தாள் முதலில் பெருமகிழ்ச்சி நம்மை அறியாது நம்மை ஆட் கொண்டு கர்வம் கொள்ளச் செய்யும். அதுவே பிறகு நம்மை யோகத்திற்கும் ஞானத்திற்கும் செல்வதற்குத் தடையாக இருக்கும். எனவே அகத்தியர் உணர்த்திய உடனே என்னைச் சரியை கிரியை இரண்டையும் நிறுத்தி பயண மாற்றம் செய்தார்.

2019 யோக பயணத்தின் தொடக்கம். தவயோகி அப்பா சொல்லித் தந்த மூச்சுப் பயிற்சி குருவாக ஷண்முகம் அண்ணன் சொல்லித்தர நானும் தவறாது இடைவிடாது செய்துவர உடலில் பலவித மாற்றங்களை உணர தொடங்கினேன். வாத பித்த கபம் என்ற மூன்றும் சரி படும் போது என் உடல் தேக்கிவைத்துக் கொண்டிருந்த கழிவுகளை அகன்று போகக் கண்டேன். இந்த காலகட்டங்களில் உடலில் உட்கிருக்கப்பட்ட நோய்களை எல்லாம் வெளியே கொண்டு வந்து அதற்கான சிகிச்சை முறைகளையும் அவ்வப்போது வந்து காண்பித்து, மருத்துவரிடமும் அனுப்பியும் வைத்தார் அகத்தியர் அப்பா.

இதில் நான் கற்ற பாடம் உடல் உறுதி பெற்று வலிமையுடன் இருந்தால் வாழ்க்கை சிறக்கும். ஞானத்திற்கான பயனும் எளிதாக இருக்கும்.

யோகமும் ஞானமும் தனிப்பயனாம் அல்ல. இரண்டுமே ஒன்று கலந்தே இருக்கும். உடலை வளைக்கும் போதே உள் பயணம் செய்ய வலியுறுத்தினார் அகத்தியர் அப்பா. தியானமே முதல் படி உள் பயணம் கொள்வதற்கு. அதற்கு உடலை வருத்திக்கொண்டு அமரக் கூடாது. எனவே உடல் வளைக்கக் கூடிய பயிற்சிகள் தந்த பிறகு அமரச் செய்யும் போது உடல் இலகுவாக இருக்க மனதைக் கட்டுப்படுத்த மட்டுமே தியானம் இருக்கும். அதற்குச் சுவாசத்தை மட்டுமே கவனம் இருந்தாலும் அலைபாயும் மனதைக் கட்டிப்போட எண்ணத்தை மட்டும் திரும்பத் திரும்ப சுவாசத்திற்குக் கொண்டு வந்து, கவனம் கொண்டு உணர்தளோடு செய்ய வேண்டும். இப்படிச் செய்ய நம்மை அறியாது நமது சிந்தனைகள் காணாமல் போக வெறும் சுவாசம் மட்டுமே நிலைத்திருக்கும். அவ்வப்போது புருவ கூச்சல்கள் வந்தாலும் தள்ளி வைத்து விட்டு மீண்டும் சுவாசத்தையே கண்காணிக்க வேண்டும். இதில் நான் கற்ற பாடம் தன்னை அறிந்தால் இன்புறலாம் மற்றும் அதன் தந்திரத்தையும் உணரலாம்.

சரி இப்போது அகத்தியர் அப்பா என்னை எங்குக் கொண்டு செல்கிறார் என்ற கேள்வி வரலாம். தற்போது யோகத்தையும் ஞானத்தையும் செய்துவர அவ்வப்போது அகத்தியர் அப்பா வாக்கு உரைக்கப் பக்தர்கள் மீது வருவதையும், என் மீது வருவதும் நடைபெற்றுக் கொண்டிருக்க, மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயையிலிருந்து விடுபடத் தனது பக்தன் பரிபூரணம் அடைந்தபின் அவர்களுக்குள் வாக்கு உரைக்க வருவதையும் ஒரு மாயை என உரைத்து அதனை அடக்கி கொள்ளும் வல்லமை பெறவும், அதற்கு ஆன்மீக பயணத்தைத் துவக்கியுள்ளார். ஆரம்பக் கல்வி ஆகவே இதைப் பார்க்கும் வேளையில் இதுவரை நான் பலமுறை நான் நான் என்று என்னை அடையாளப் படுத்திக்கொண்டதை நிறுத்தும் வகையில் ஒரு புதிய அனுபவ பயணம் நடைபெறுகிறது. நான் என்ற ஆணவம் அழியும்போது மாயை என்ற திரை விலகி எப்படி ரமண மகரிஷி நான் வேறு அல்ல நீ (இறைவன், அருட்பெருஞ்ஜோதி, பிரபஞ்சம்) வேறு அல்ல என்ற நிலைக்குக் கொண்டு செல்லும் நிலை தற்போது. கன்மம் மட்டும் சரியை கிரியையில் முற்றிலும் சித்தர்களின் அருளால் போக்கப்பட்டு யோகத்திற்கும் ஞானத்திற்கும் பயணிக்கச் சித்தம் ஆகிறோம்.

சித்த பயணத்தை இருவகைகளாகப் பிரிக்க, ஒன்றாவது மனித நெறி பயணம் இதற்கு குருவின் தேவை சரியை கிரியையோடு நின்று விடும். பிறகு அந்த சீடன் கற்றவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலே போதும். உணவிலோ உடையிலோ மாற்றம் தேவை இருக்காது, மனத்தினையும் ஆசைகளை மட்டும் கையாள வேண்டும். தொடர்ந்து சரியை கிரியை செய்து வரலாம். உலக வாழ்க்கைக்கான ஞானம் கிட்டுமே தவிர ஒளி பயணத்திற்கு வழிவகுக்காது.

இரண்டாவதாக ஞான பயணம்/ஜோதி பயணம். இதற்கு உடல், உள்ளம் தூய்மை பெறுவது அவசியம். புலால் உண்ணுதலை தவிர்க்கும் பட்சத்தில் முதல் உடல் தூய்மை ஆரம்பமாகிறது. பிறகு கடுமையான வைராக்கியம் வேண்டும். சித்தர்கள் கொடுக்கும் பயிற்சிகளை விடாமல் செய்வதும், சொல்லிய பொழுதே செய்வதும், ஏன் என்ற கேள்விகள் இன்றி நிறுத்தவும் வேண்டும். இது அடுத்தகட்ட தூய்மை. பிறகு, மனத்தூய்மை செய்யத் தியானம் செய்து வர ஆன்மாவோடு பேசத் தொடங்க வேண்டும். இவ்வகை செய்யும்வண்ணம் சிந்தனை தூய்மையும் செய்தாக வேண்டும் எனில் இங்குதான் சித்தர்களும் பூதகணங்களும் தேவலோகர்களும் நம்மோடு மாய விளையாட்டைச் செய்யத் தொடங்குவார்கள். ஆகவே இதற்கு நாம் குருவைத் தேடுவதை விட நாம் செய்யக்கூடிய சரியான கிரியையைக் கண்டு நம்மை குரு தேர்வு செய்வார். அவர் நம்மை அந்த மூலப் பொருளுக்கே கொண்டு செல்லும் வரை வழிநடத்துவார். தான் வழிபடும் மூலத்தையே நமக்கு அடையாளம் காட்டிவிடுவாரே ஒழியத் தன்னை போற்றிட ஒரு போதும் சொல்வதில்லை. இவ்வாறே நம்மைத் தேர்வு செய்த குரு யார் என்று நாம் கண்டு கொள்ளலாம்.

எந்த பயணத்தை நாம் தேர்வு செய்கிறோமோ அதன் படியே பயணமும் ஒவ்வொருவருக்கும் வேறு படும். ஒப்பிடுதல் ஒருபோதும் ஆன்மிக பயணத்தில் இருக்கக் கூடாது. நாம் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு பொழுதிலும் சித்தர்களின் ஞான பாடங்களும் அற்புதங்களும் இருப்பதை உணர்தலே நமது பயணம் சிறப்பு மிக்க பயணமாக அமையும். அதனை நம் சிந்தை கொண்டு தவயோகி அப்பா சொல்லியதுபோல் “மாயையின் விளக்கம் புரிந்து அதை மனதிலே இருந்து ஒடுக்கித் தள்ளித் தத்துவ விசாரத்தால் வெற்றியடைய வேண்டும்”.